ஜனநாயகன் படத்தை பார்ப்பதன் மூலமாக மூளைக்கு சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் ஏற்படும்: ஜேசிடி.பிரபாகர் பேட்டி

சென்னை: ஜனநாயகன் படத்தைப் பார்ப்பதன் மூலமாக மூளைக்குச் சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் ஏற்படும் என ஜேசிடி.பிரபாகர் கூறினார். சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் விடுதியில் தமிழ் விவசாய வணிகத் தொழில் மற்றும் சேவைகள் சம்மேளனம் சார்பில் தமிழர் 4.0 என்ற தலைப்பில் உலகளாவிய வர்த்தகம் மற்றும் வணிக உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இதனை சபாநாயகர் ஜேசிடி.பிரபாகர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்கள் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தமிழ் தொழில் முனைவோர்கள் மற்றும் வணிகர்கள் கலந்து கொண்டனர். மேடையில் சபாநாயகர் ஜேசிடி.பிரபாகர் பேசியதாவது: சரியான பாதையில் தான் முதலமைச்சர் பயணிக்கிறார்; அந்தப் பாதை தெளிவாக இருக்கிறது. நேற்று முதல் காட்சியே ஜனநாயகன் படத்தை பார்த்து விட்டேன்.

உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம். அந்தப் படம் பலருக்குப் பாடமாக அமைந்து இருக்கிறது. ஜாதி மதங்களை யார் எப்படி பிரிக்க முயற்சிக்கிறார்கள் என்பது தெளிவாக காண்பிக்கப்பட்டிருந்தது. முழுமை பெற்ற மனிதன் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை வழிகாட்டும் படமாக இருந்தது. ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சி அமைந்திருக்கிறது. தொழில் முனைவோரின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்வேன்.

சிறு குறு தொழில் நிறுவனங்கள் எங்கெல்லாம் முடங்கிக்கொண்டிருக்கிறது என்று கவனித்து வருகிறேன். அவர்களின் கோரிக்கைகள் எல்லாம் நான் நன்கு அறிந்ததுதான். எங்கு அவர்கள் முடங்கி கிடக்கிறார்கள் என்று அறிந்து அதை சரி செய்வது நமது கடமை. தொழில்துறையில் பெரிய திட்டங்களை வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்பார்க்கலாம். தொடர்ந்து நிருபர்களைச் சந்தித்த ஜேசிடி.பிரபாகர் கூறியதாவது:

மாணவர்களின் போராட்டத்தை ஜனநாயகன் படம் மழுங்கடித்து விட்டதாக கூறுகிறார்கள்; படம் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது. குறிப்பிட்ட தேதியில் வெளியிட்டு இருக்கிறார்கள். மாணவர்கள் போரட்டத்திற்கும் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த படத்தைப் பார்ப்பதன் மூலமாக மூளைக்குச் சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் ஏற்படுமே தவிர, மாணவர்களின் மூளையை மூளைச் சலவை செய்யும் படமல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: