பழநி நில முறைகேட்டில் சஸ்பெண்ட் ஆன சார்பதிவாளர் ஜஸ்டின் ஏற்கனவே ஆள்மாறாட்டம் செய்தது அம்பலம்: தேனியிலும் முறைகேடு செய்து முன்ஜாமீன் பெற்றவர்: நடவடிக்கை கோரி காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் மனு

தேனி: பழநி நில மோசடி வழக்கில் சிக்கியுள்ள சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், ஏற்கனவே பெரியகுளம் அருகே ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை பத்திரப்பதிவு செய்த வழக்கில் முன்ஜாமீன் பெற்றவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் தேனி எஸ்பியிடம் மனு அளித்துள்ளார். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேல்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பாலவிஜய். இவர் தற்போது காஞ்சிபுரத்தில் தனது தாயுடன் வசித்து வருகிறார். இவருக்கு மேல்மங்கலத்தில் சொந்தமாக வீடு, நிலம் உள்ளது.

இதை கட்டத்தேவன் என்பவர் பராமரித்து வந்தார். பாலவிஜய், வீடு மற்றும் நிலத்தை விற்பனை செய்ய முயற்சித்தபோது, கட்டத்தேவன் மற்றும் அவரது உறவினர்கள் பாலவிஜய் போல் ஆள் மாறாட்டம் செய்து முறைகேடாக ஏற்கனவே பத்திரப்பதிவு செய்து சொத்தை விற்றது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தேனி எஸ்பி அலுவலகத்தில் கடந்தாண்டு புகார் அளித்தார்.

மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், கட்டத்தேவன், ஈஸ்வரன் மற்றும் அப்போதைய பெரியகுளம் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், சார் பதிவாளர் ஜெகதீஸ்வரன், ஓய்வு பெற்ற சிறப்பு ஆய்வாளர்கள் அம்மாவாசி, பாண்டியராஜன் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில், ஈஸ்வரன், கட்டத்தேவன் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

தற்போது, பழநி மலைக்கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ரூ.2 கோடிக்கு கிரையம் பதிந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இவர் மீதான விசாரணையை தீவிரபடுத்தியபோது, அவர் பெரியகுளம் சார்பதிவாளராக இருந்தபோது பாலவிஜய்க்கு சொந்தமான நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து விற்பனை செய்த வழக்கில் முன்ஜாமீன் பெற்றிருப்பது தெரியவந்தது.

இதனிடையே தேனி எஸ்பி அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் வந்த பாலவிஜய், ‘‘ஜஸ்டின் மணிகண்டன் மீது புகார் தெரிவித்து ஓராண்டைக் கடந்தும், தேனி குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்’’ என புகார் மனு அளித்தார்.

பின்னர் அவர். நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீது கடந்த ஆண்டே எனது புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். முறைகேடாக பத்திரப்பதிவு செய்து எனது சொத்தை விற்பனை செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தர வேண்டும்’’ என்றார்.

* மின்வாரிய அதிகாரிகளுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்
பழநியில் ரூ.100 கோடி நில முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும் என திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் சிபிசிஐடி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று பழநி மின்வாரிய அதிகாரிகளை விசாரணைக்கு ஆஜராக வலியுறுத்தி சிபிசிஐடி போலீசார் சம்மன் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பழநி கோயில் நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் 18க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன. இக்கடைகளுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டிருந்தது. எந்த ஆவணங்களின் அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்பட்டது? மின் இணைப்பு கோரி விண்ணப்பித்தவர்கள் யார்? அதற்காக இணைத்த ஆவணங்களின் விபரம், மின்சார இணைப்பு யாருடைய பெயரில் வழங்கப்பட்டது? மின் இணைப்பை துண்டிக்க வலியுறுத்தி கடிதம் வழங்கியது யார்?

அதற்காக வழங்கப்பட்ட கடிதம், இணைக்கப்பட்ட ஆவணங்களின் விபரங்களை பெறுவதற்கும், அதுதொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கும் சம்மன் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே, நில பத்திரப்பதிவு ஆவணத்தில் சாட்சி கையெழுத்திட்ட பழநி கோதைமங்கலத்தை சேர்ந்த செல்வக்குமார், சிவசுப்பிரமணியம் ஆகியோரிடம், திண்டுக்கல் சிபிசிஐடி போலீசார் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தினர்.

Related Stories: