சென்னை: தமிழ்நாடு கவர்னர் அர்லேகர் திடீர் அவசர பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். கவர்னர் அர்லேகர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து, பயணிகள் விமானம் மூலம் சென்னை வந்தார். அவருக்கு வெளியூர் பயணம் எதுவும் திட்டம் இல்லை என்றும், கிண்டி மக்கள் பவனில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு கவர்னர் அர்லேகர், நேற்று பிற்பகல் 2.30 மணியளவில், இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.
அவரது செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் டெல்லி சென்றனர். அவர் டெல்லியில் இருந்து, எப்போது திரும்பி வருவார்? என்று எந்த தகவலும் இதுவரை வரவில்லை. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. கவர்னரின் திடீர் டெல்லி பயணத்திற்கு என்ன காரணம்? என்பது தெரியவில்லை. ஆனால் டெல்லியில் இருந்து வந்த, அவசர அழைப்பின் காரணமாக, கவர்னர் திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
