ஜனநாயகன் என படம் எடுத்தால் மட்டும் போதுமா? எல்லா காலத்திற்கும் ரீல்சும், போலி கண்ணீரும் உதவாது: நீட் விவகாரத்தில் பூனைக்கும் நண்பன், பாலுக்கும் காவல்; தவெக அரசு மீது கிருஷ்ணசாமி சாடல்

நெல்லை: மாஞ்சோலை போராளிகள் நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லைக்கு வந்த புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தூத்துக்குடி மாநகர பகுதியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர் காவல் நிலையத்தில் உயிரிழந்துள்ளார். காவல் நிலைய மரணங்கள் ஏற்புடையதல்ல. இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஜனநாயகன் படமும், தமிழக அரசும் குறித்து கூற வேண்டுமெனில், எல்லா காலத்திற்கும் ரீல்சும், போலி கண்ணீரும் உதவாது.

திரை மாயை கொஞ்ச காலத்திற்குத்தான் இருக்கும். இளைஞர்கள், மாணவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் அமைச்சர்கள் அதில் கவனம் செலுத்தவேண்டும். சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். ஆனால் இதனை கவனிக்காமல் விட்டுவிட்டு அமைச்சர்கள் இன்னும் ரசிக மன நிலையில் உள்ளனர். பூனைக்கும் நண்பன், பாலுக்கும் காவல் என்பதே நீட் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளது.

போராட்டம் என்பது அனைவரது உரிமையாகும். ஜனநாயகன் என படம் எடுத்தால் போதுமா? ஜனநாயகம் என்பது ஒரு வாழ்வியல் முறையாகும். விரும்பியோ, விரும்பாமலோ நடக்கும் போராட்டங்களுக்கு அனுமதி வழங்குவதுதான் முறையாகும். மக்களவை தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகள் உள்ளது.

அரசியல் நிலைப்பாடு தேர்தலுக்கு முன் 2 அல்லது 3 நாட்களில் கூட மாறும். 2029 தேர்தலில் என்ன நிலை வரும் என்பதை இப்போதே கணிக்க முடியாது. கட்சி கூட்டணி மாறுவது அரசியல் கட்சிகள் இயல்பு. ஆனால் சில கட்சிகள் (மதிமுக) அதனையே வாடிக்கையாக வைத்துள்ளது. சந்தர்ப்பத்திற்கும், பதவிக்கும், ஆதாயத்திற்காகவும் இணைவோரை மனதில் வைத்து வரும் காலத்தில் த.வெ.க செயல்படவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: