கடலூர்: தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எம்எல்ஏ, நேற்று கடலூரில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரை சந்தித்து விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வு விவகாரத்தில் மக்கள் பக்கம்தான் தேமுதிக நிற்கும். இதில் தமிழக அரசின் செயல்பாடு என்பது ஓட்டு போட்ட மக்கள் தான் முடிவு செய்யணும். இன்று வரை எந்த ஒரு அடிப்படை பணிகளும் ஆரம்பிக்கவில்லை. கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆக போகுது.
கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கொண்டது. இது ஒன்னும் சினிமா கிடையாது. சும்மா ரீல்ஸ் போடறதுக்கோ, சீன் போடறதுக்கோ, போட்டோ சூட் பண்றதுக்கோ கிடையாது. இந்த அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். மக்கள் தீர்ப்பு தான் மகேசன் தீர்ப்பு. ரீல் ஹீரோ ரியல் ஹீரோவாக மாற வேண்டும் என்றால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் மின்தடை நீடிக்கிறது. அதனால் மின்சாரத்தை தடையின்றி கொடுத்துவிட்டு, அதன் பிறகு இலவச மின்சாரத்தை கொடுங்கள்.
நாங்களும் பொறுத்து இருக்கிறோம். என்ன செய்யறாங்க என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். என்னுடைய பதில் சட்டசபை கூடியதும் கண்டிப்பாக தெரிவிப்பேன். நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. புதுடெல்லியில் நடைபெறும் போராட்டத்துக்கு தமிழக மாணவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மக்கள் விரும்புவதை அரசுகள் செய்ய வேண்டும். எனவே, நீட் தேர்வு விவகாரம் குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் மக்கள் உணர்வுகளை மதித்து முடிவெடுக்க வேண்டும்.
நீட் விவகாரத்தில் மத்திய கல்வி மந்திரி பதவி விலக வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும். இன்றுவரை காவிரியில் தண்ணீர் விடல, மேகதாது கட்டுவோம் என கர்நாடகா அரசு போல்டாக தெரிவிக்கின்றனர். நம்ம அரசு என்ன பண்ணுது. அரிசி விலை ஒரு கிலோ 40 முதல் 50 ரூபாய் வரை உயர்வை கண்டுள்ளது. ஒரு டன் அரிசி ரூபாய் 15,000 வரை உயர்ந்துள்ளது. மக்கள் நம்பியுள்ளது அரிசி. அரிசிக்கு இந்த நிலை என்றால் விலைவாசி உயர்வு எப்படி போகும்.
எனவே அரசு இதை பற்றி சிந்திக்க வேணும்.
வெறும் சினிமா பார்த்துக்கிட்டு, தியேட்டரில் உட்கார்ந்து அழுதுகிட்டு சீன் ஓட்டறது கிடையாது. இன்னைக்கு பல கோடி மக்களின் வாழ்வாதார பிரச்னை. 23ம் தேதி ஒரு லாக் அப் மரணம் நடந்துள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதியில் தொடர்ச்சியாக லாக்கப் மரணம் நடந்து வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். காவல்துறைக்கு அடித்து கொலை செய்ய எந்த சட்டத்திலும் இடமில்லை. வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது. இதே நிலை தொடரக்கூடாது என்பதில் தேமுதிக உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
