சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராகவும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரியும் மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு ஆதரவாக, தமிழ்நாட்டிலும் பல்வேறு மாணவர் அமைப்புகள் அமைதியான ஜனநாயக வழியில் போராட்டங்களை நடத்த முன்வந்துள்ளன.
நீட் தேர்வை கடுமையாக எதிர்த்தவரும் தான் தற்போதைய தமிழ்நாடு முதல்வர். அந்த நிலைப்பாட்டை வெளிப்படையாக முன்வைத்து மக்களின் ஆதரவைப் பெற்றவர், இன்று ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது, அதே நீட் தேர்வுக்கு எதிராக ஜனநாயக வழியில் குரல் கொடுக்கும் மாணவர்கள் காவல்துறை நடவடிக்கைகளுக்கு உள்ளாவது பெரும் முரண்பாடாக தெரிகிறது.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உண்மையிலேயே உறுதியான நிலைப்பாட்டில் இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டுமெனில், நீட் தேர்வுக்கு எதிராக அமைதியான முறையில் போராட விரும்பும் மாணவர்களுக்கு உரிய அனுமதியையும் முழுமையான காவல் பாதுகாப்பையும் வழங்க வேண்டும்.
