சென்னை: ஒன்றிய அரசின் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கு அரசுப் பள்ளிகள் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் இளம் மாணவர்களில் அறிவியல் ஆர்வம் உள்ள மாணவர்களை கண்டறிந்து ஊக்கப்படுத்துவதற்காக ‘இன்ஸ்பையர் மானக் விருது’ திட்டம் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் மூலம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது பணிகளை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் பள்ளிக் கல்வித் துறையின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றி வருகிறது. இந்நிலையில் நிகழ் கல்வியாண்டுக்கான புத்தாக்க அறிவியல் விருதுகளுக்கான விண்ணப்பப் பதிவு www.inspireawards-dst.gov.in என்ற இணையதள முகவரியில் தொடங்கியுள்ளது. இந்த விருதுக்கு பள்ளிகள் செப்.15 வரை விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின்கீழ், பள்ளிகள் தங்கள் பள்ளி மாணவர்களின் 5 சிறந்த புத்தாக்க கண்டுபிடிப்புகளை பரிந்துரை செய்யலாம்.
சமுதாயத்துக்கு பயன்மிக்க, சுற்றுச்சூழலுக்கு உகந்த, புதுமையான திட்டங்களை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள திட்டங்களைவிட எந்தவகையில் மேம்பட்டது என்பதை பொறுத்து தேர்ந்தெடுக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது, ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த பரிசுத் தொகையை கொண்டு மாணவர்கள் தங்கள் திட்ட மாதிரி வடிவங்களை சிறப்புற தயாரித்து போட்டிகளில் கலந்துகொள்கின்றனர்.
இத்திட்டத்தின் மூலம் ஏழை எளிய மாணவர்களும் விருது தொகையின் உதவியோடு சிறந்த முறையில் அறிவியல் காட்சிப்பொருட்களை தங்கள் அறிவியல் திறனுக்கேற்ப உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. நிகழ் கல்வியாண்டில் அதிகப்படியான மாணவர்கள் விண்ணப்பிக்க அனைத்து வகை அரசு, அரசு நிதியுதவி பெறும், தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
