சென்னை: பள்ளிக்கரணையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ததை எதிர்த்து பிரிகேட் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு மாநில சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் பிரிகேட் கட்டுமான நிறுவனம் 1250 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்டமிட்டிருந்தது. இதற்கு தமிழ்நாடு மாநில சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகியவை ஒப்புதல் அளித்திருந்தன.
ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டுள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி வழங்கியதாக கூறி அறப்போர் இயக்கம் மற்றும் அதிமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தியது. இந்நிலையில், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றிய ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கட்டுமானங்களுக்கு தடை விதித்த தமிழக அரசு, பிரிகேட் நிறுவனத்துக்கு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் வழங்கிய சுற்றுச்சூழல் ஒப்புதலை மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ஜூன் 18ம் தேதி ரத்துசெய்தது.
இதை எதிர்த்து, பிரிகேட் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் மனுவில், சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்யும் முன் தங்கள் நிறுவனத்திடம் கருத்தை கேட்காமல் தன்னிச்சையாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முகமது சபீக், பிரிகேட் நிறுவனத்தின் கருத்தை கேட்காமல் சுற்றுச்சூழல் ஒப்புதலை ரத்து செய்தது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 28ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
