ரூ.159 கோடியில் குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மந்தகதியில் பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் வளர்ச்சி திட்ட பணிகள்: தாமதம் ஆவதால் பக்தர்கள் வேதனை: விரைந்து முடிக்க கோரிக்கை

 

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் வளாகத்தில், குளியல் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த, ₹159 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள், மந்தகதியில் நடைபெறுவதால், பக்தர்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணிகளை விரைந்து மடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

பெரியபாளையத்தில் புகழ் பெற்ற ஸ்ரீபவானி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு, ஆடி மாதத்தில் ஆடித்திருவிழா சனி, ஞாயிற்றுக்கிழமையில் 10 வாரங்கள் நடைபெறும். இத்திருவிழாவிற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் இருந்து கார், பேருந்து, வேன், ஜீப், லாரி, ஆட்டோ, மாட்டு வண்டி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து சனிக்கிழமை இரவு தங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைத்து, மொட்டையடித்து, வேப்பிலை ஆடை அணிந்து கோயிலை வலம் வந்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.

அவ்வாறு வரும் பக்தர்களுக்கு போதிய வசதி இல்லாததால், பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்தித்தர கடந்த ஆட்சியில் திமுக அரசு முடிவு செய்தது. அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பெரியபாளையம் ஸ்ரீ பவானி அம்மன் கோயில் பெருந்திட்ட வளாக பணிகள் செய்ய ரூ.159.23 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாக அமைச்சர் சேகர் பாபு சட்ட சபையில் அறிவித்தார்.அதன்படி ரூ.159.23 மதிப்பீட்டில் பக்தர்கள் வரிசை மண்டபம், பக்தர்கள் ஓய்வகம், அன்னதான கூடத்துடன் கூடிய திருமண மண்டபம், குளியலறை வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கும் பணிகள் செய்ய 28.3.2023 அன்று நிர்வாக அனுமதி பெறப்பட்டது. அதன் பின்னர் தொழில் நுட்ப அனுமதியுடன், 2.2.2024 அன்று பணியாணை வழங்கப்பட்டது.

பின்னர், இந்த பணிகளை, 17.2.2024 அன்று அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பணிகள் தொடக்கி வைத்தார். பின்னர், 15.3.2024 முதல் கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில், தற்போது இப்பணிகள் மந்தகதியில் நடந்து வருகிறது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

Related Stories: