மெரினா அண்ணா சதுக்கத்தில் ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் குளிர்சாதன பஸ் நிறுத்தம்: டெண்டர் வெளியிட்டது மாநகராட்சி

 

சென்னை: மெரினா அண்ணா சதுக்கத்தில் ரூ.78 லட்சம் மதிப்பில் குளிர்சாதன பேருந்து நிறுத்தம் அமைப்பதற்கான டெண்டரை சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ளது.
சென்னையில் மாநகர பஸ் சேவையை நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதேபோன்று, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மூலம் நாள்தோறும் 3,600 பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோடை காலங்களில் காணப்படும் வெயில் தாக்கத்தை கருத்தில் கொண்டு ஏசி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும் இன்னும் வெயில் தாக்கம் குறையாததால் ஏசி பேருந்துகள் அனைத்தும் நிரம்பியபடியே செல்கின்றன. வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருவதால் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து நிறுத்தங்களை அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முடிவு செய்தது. அந்த வகையில் சென்னையில் பெரம்பூர், கொளத்தூர், ராயபுரம், துறைமுகம் ஆகிய 4 இடங்களில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் ஏசி வசதியுடன் கூடிய பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா காமராஜர் சாலையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் ஏசி வசதியுடன் கூடிய நவீன பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான டெண்டரை சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ளது. மொத்தம் ரூ.78.40 லட்சம் மதிப்பீட்டில் இந்த பஸ் நிறுத்தம் அமைக்கப்பட இருக்கிறது. அதில் பயணிகளுக்கான நவீன இருக்கைகள், கைப்பேசி சார்ஜ் வசதி, பேருந்துகள் வருகையை அறிவதற்கான டிஜிட்டல் தகவல் பலகைகள் உள்ளிட்டவை இடம் பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள ஒப்பந்ததாரர்கள் ஆகஸ்டு 5ம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக டெண்டர் கோரி விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Related Stories: