குற்றாலம் செல்லும் பகுதியில் சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்கத் தடை கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்தபோது, ஆயிரப்பேரி ஊராட்சி தரப்பில் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, “இயற்கை நமக்கு மலைகளையும், மழையையும், அருவிகளையும் வழங்கியுள்ளது. இயற்கை வளங்களை மக்கள் அனுபவிக்க ஏன் இத்தனை சுங்கக் கட்டணங்கள்?” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், “இது பொதுமக்களிடமிருந்து தண்டல் வசூலிப்பதைப் போன்றதாக உள்ளது” என்றும் நீதிபதி தண்டபாணி குறிப்பிட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வன அலுவலர் பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மாநில நெடுஞ்சாலைத் துறையின் கோட்டப் பொறியாளர் விரிவான நிலை அறிக்கையை தாக்கல் செய்யவும் ஆணையிடப்பட்டுள்ளது. தென்காசியைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவர் இந்த மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ளார்.
