திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் எதிரொலி கீழடி அகழாய்வுப்பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தும்: அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், கீழடிக்கு தமிழக கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று வந்தார். கீழடியில் நடந்து வரும் 11ம் கட்ட அகழாய்வு தளத்தையும், திறந்தவெளி அருங்காட்சியகத்தையும் ஆய்வு செய்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கீழடி அகழாய்வுகளை தமிழக அரசு இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என கூறியிருந்த நிலையில், அதற்கு விளக்கம் அளித்த அமைச்சர், ‘‘தமிழக அரசு முந்தைய அரசுகள் செய்த நல்ல பணிகளை ஒருபோதும் நிறுத்தாது.

கீழடி அகழாய்வு பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தும்.கீழடி தமிழர்களின் நாகரிகத்திற்கு மட்டுமல்லாமல், உலக நாகரிகத்திற்கு ஒரு தாய்மடி போன்றது’’ என்று கூறினார். பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடை: ‘‘அரசு பள்ளி மாணவர்களின் சீருடை மாற்றப்படுமா?’’ என்று நிருபர்கள் கேட்டதற்கு, அமைச்சர் ராஜ்மோகன், ‘‘பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில் புதிய சீருடை வடிவமைப்பு முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

விரைவில் அது குறித்து அறிவிப்பு வெளியாகும். பத்திரிகையாளர்களுக்கான நல வாரிய சேவைகள் அனைத்தும் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு, அவர்களுக்கான நலன்கள் எளிதாக சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். கீழடியில் அமைச்சர் ஆய்வு செய்ததை ரீல்ஸ் போடுவதற்காக தவெகவினர் தடைைய மீறி ட்ரோன் மூலம் வீடியோ எடுத்தனர்.

Related Stories: