கோவை: கோவைப்புதூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 4-வது பட்டாலியன் கமாண்டன்டாக பணியாற்றி வந்தவர் செந்தில்குமார் (55). இவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் செந்தில்குமார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக கோவை லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து கடந்த 9ம் தேதி போலீசார் அவரது வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் தனது வருமானத்திற்கு அதிகமாக 126 சதவீதம் கூடுதல் சொத்து சேர்த்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
விருதுநகர் மாவட்டம் ரெட்டையார்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார், கடந்த 1997-ம் ஆண்டு எஸ்ஐ.,யாக போலீசில் பணியில் சேர்ந்தார். படிப்படியாக பதவி உயர்வு பெற்று கோவைபுதூர் 4-வது பட்டாலியன் கமாண்டன்டாக கடந்த 2022 முதல் பணியாற்றி வந்தார். இதற்கிடையே கடந்த 2025ல் பாலியல் புகாரில் கைதாகி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், செந்தில்குமார் கமாண்டன்டாக பணியாற்றிய காலக்கட்டத்தில் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
முதற்கட்ட விசாரணையில், 1.10.2022 முதல் 31.10.2025 வரையிலான காலக்கட்டத்தில் செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயரில் வீடு, வீட்டு மனைகள், சொகுசு வாகனங்கள், தங்க நகைகள் மற்றும் வங்கி கணக்குகளில் பெருமளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.அவரது சட்டபூர்வமான வருமானம் மற்றும் செலவினங்களை கணக்கிட்டதில், முறையான ஆதாரங்கள் இன்றி தனது பெயரிலும், மனைவி சுதாமதி மற்றும் உறவினர்கள் பெயரிலும் ரூ. 1 கோடியே 28 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பிலான சொத்துக்களை அவர் வாங்கி குவித்துள்ளது உறுதி செய்யப்பட்டது. இது அவரது மொத்த வருவாயை விட 126 சதவீதம் அதிகம் ஆகும். இதையடுத்து, ஊழல் தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு போலீசார் கூறினர்.
