திருவெண்ணெய்நல்லூர்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சரவணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் மகன் மோகன்ராஜ்(25). இவர் மீது பல்வேறு கொலை மற்றும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நேற்று முன் தினம் சரவணம்பாக்கம் கிராமத்தில் உள்ள வேம்பழகி அம்மன் கோயிலில் சாகை வார்த்தல் திருவிழா நடைபெற்றது. திருவிழாவின்போது ஊரணி பொங்கல் வைத்து பெண்கள் ஊர்வலமாக வரும்போது சரவணம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே மோகன்ராஜ் பெண்களை வழி விடாமல் தடுத்து அரிவாள் வைத்துக் கொண்டு மிரட்டியுள்ளார். இதனால் பெண்கள் அலறியடித்து சாலையிலிருந்து இறங்கி வேறு வழியாக சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் அன்று இரவு 8.30 மணி அளவில் கிராமத்தில் உள்ள தெருக்களில் அரிவாளை வைத்துக்கொண்டு போவோர், வருவோரை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அன்று இரவு 11 மணி அளவில் கடலூர்-சித்தூர் சாலை சரவணம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகில் சரமாரியாக தாக்கப்பட்டு தலை நசுங்கி மர்மமான முறையில் மோகன்ராஜ் இறந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார்சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே மோகன்ராஜின் பல்வேறு அட்டூழியங்களால் பாதிக்கப்பட்ட சரவணம்பாக்கம் ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கிராமத்தில் மோகன்ராஜின் உடலை புதைக்க கூடாது, தகனம் செய்யக்கூடாது என கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மகன் கொலை குறித்து மோகன்ராஜின் தந்தை பஞ்சவர்ணம் அளித்துள்ள புகாரில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மோகன்ராஜ் காதலித்த விவகாரத்தில் முன்விரோதம் காரணமாக அவரை அடித்து கொன்றுள்ளதாகவும், சந்தோஷ்(37), கிசங்கர்(47), விஜய் (21), ஐயப்பன் ஆகியோருக்கு இதில் தொடர்புள்ளதாகவும் கூறியுள்ளார். இதில் 3 பேரை திருவெண்ணெய்நல்லூர் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள சந்தோஷை தேடி வருகின்றனர்.
