மபியில் கென்-பெட்வா இணைப்பு திட்டத்துக்கு எதிர்ப்பு; 15வது நாளாக பழங்குடியினர் போராட்டம்

சத்தர்பூர்: மபியில் கென்-பெட்வா நதி இணைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்களின் உண்ணாவிரத போராட்டம் 15-வது நாளை எட்டியது. கென்-பெட்வா நதி நீர் இணைப்புத் திட்டம், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் வறட்சி பாதிப்புக்குள்ளான பந்தேல்கண்ட் பகுதிக்கு பாசனம் மற்றும் குடிநீர் வழங்குவதற்காக, கென் நதியில் உள்ள உபரி நீரை பெட்வா நதிக்கு மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இருப்பினும், இடம்பெயர்வு, மறுவாழ்வு மற்றும் பன்னா புலிகள் காப்பகத்தின் சில பகுதிகள் உட்பட காடுகள் மற்றும் வனவிலங்குகள் மீதான அதன் தாக்கம் தொடர்பான பிரச்னைகள் காரணமாக, பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் குழுக்களிடமிருந்து கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. சத்தர்பூர் மாவட்டம்,குப்பி கிராமத்தில் உள்ள பழங்குடி மக்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமித் பட்நாகர் என்பவர் தலைமையில் போராட்டம் நடந்து வருகிறது. இதில் பழங்குடி மக்களின் உண்ணாவிரம் நேற்று 15 வது நாளை எட்டியது.

ஏற்கனவே அந்த பகுதியில் செயல்படுத்திய ரஞ்ச் மற்றும் மஜ்கான் நீர்பாசன திட்டங்களால் பாதிக்கப்பட்ட 176 பேருக்கு போதிய இழப்பீடு வழங்கவில்லை என அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். அவர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,கென்-பெட்வா நதி இணைப்பு திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக கூடுதலாக ரூ.202 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் புனர்வாழ்வு உதவி தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்தத் திட்டம் குறித்து சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அது பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தது.கென்-பெட்வா இணைப்புத் திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. இது பந்தேல்கண்ட்டில் நீர்ப்பாசனம், குடிநீர் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியை உருவாக்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

Related Stories: