நாக்பூர்: விவசாயத்தில் நீர் பயன்பாடு மற்றும் செலவுகளை குறைப்பதற்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துமாறு ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி யோசனை தெரிவித்துள்ளார். நாக்பூரில் நேற்று நடந்த விழாவில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதற்காக, வேளாண் மேம்பாட்டு அறக்கட்டளை தலைவர் ராஜேந்திர பவாருக்கு ஒன்றிய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கட்கரி பேசியதாவது:
செயற்கை நுண்ணறிவு மற்றும் டிரோன் அடிப்படையிலான தொழில்நுட்பங்கள் விவசாயத்தை மேலும் திறமையானதாகவும், நிலையானதாகவும் மாற்றும் ஆற்றல் கொண்டுள்ளன. செயற்கை நுண்ணறிவால் நீர் பயன்பாட்டைக் குறைக்கலாம், உரமிடுதலை உகந்ததாக்கலாம், நோய்கள் பரவுவதற்கு முன்பே அவற்றைக் கண்டறியலாம். இந்த முன்னேற்றங்களின் மூலம் விவசாயிகள் பயனடைய,அவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் டிரோன்களைப் பயன்படுத்துவதில் பயிற்சி அளிப்பது அவசியம்.
அக்ரோவிஷன் என்னும் அறக்கட்டளை, மகாராஷ்டிராவின் விதர்பா பகுதி முழுவதும் 1,000 ஆரஞ்சு விவசாயிகளுக்கும் 5,000 கரும்பு விவசாயிகளுக்கும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான விவசாய முறைகளை கையாளும் திறன் பெறுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. துல்லியமான வேளாண்மை மூலம் பயிர் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதும், உள்ளீட்டுச் செலவுகளைக் குறைப்பதும் இதன் நோக்கம் ஆகும். இவ்வாறு நிதின் கட்கரி பேசினார்.
