அழுக்காகாது.. கிழியாது.. நனைந்தாலும் அப்படியே இருக்கும்.. பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம்: இந்திய ரிசர்வ் வங்கி முடிவு

புதுடெல்லி: இந்தியாவில் நாம் தற்போது பயன்படுத்தும் காகித பண நோட்டுகள் சீக்கிரம் அழுக்காகி விடுகின்றன. அத்துடன் வெயிலில் வியர்த்து நனைவது, மழையில் தண்ணீர்பட்டு நனைவது, சிலர் ரூபாய் நோட்டுகளை பல அடுக்கு மடித்து வைப்பதால் கிழிந்து பயன்படுத்த முடியாமல் போவது போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இதுபோன்ற நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெற்று வந்தாலும், அதிலும் சில பிரச்னைகள் உள்ளன.

இந்த பிரச்னைகளை கருத்தில் கொண்டு நீண்ட நாள் உழைக்க கூடிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை விரைவில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ள ரிசர்வ் வங்கி அதற்கான முதல்கட்ட பணிகளை தொடங்கி உள்ளது. இதன் தொடக்கமாக அடுத்த ஆண்டு(2027) ரூ.10 மற்றும் ரூ.20 ஆகிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை சோதனை அடிப்படையில் புழக்கத்தில் விட திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரான் பிரைவேட் லிமிடெட், பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை தயாரிப்பதற்கு பிரத்யேக பாலிமர் சப்ஸ்ட்ரேட் என்ற தாள்களை வழங்க உலகளாவிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து, டெண்டர் வௌியிட்டுள்ளது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஆகஸ்ட் 18ம் தேதி கடைசி நாளாகும். மொத்தம் 68,000 ரீம்கள் கொண்ட பாலிமர் தாள்கள் முதல்கட்டமாக கேட்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் வந்தாலும், தற்போது புழக்கத்தில் உள்ள காகித ரூபாய் நோட்டுகளும் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: