திருவண்ணாமலை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தமிழ் தேசிய மாநாடு தொடர்பான மண்டல செயற்குழு கூட்டம் திருவண்ணாமலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. இதில், கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியதாவது: ஒரு கட்சி கூட்டணியில் வென்று, இன்னொரு கூட்டணி அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து பலரும் விமர்சிக்கின்றனர். தயங்கி தயங்கித்தான் இந்த முடிவை எடுத்தோம். எங்களுக்கு பதவியில் நாட்டம் இல்லை. இந்த தேர்தலில் சாதி, மதம், பணத்தால் திமுக, அதிமுக அணிகள் தோற்கடிக்கப்படவில்லை.
திராவிட இயக்க அரசியலுக்கு எதிரான வெறுப்பு அரசியல் தொடர்ந்து தமிழ்நாட்டில் பரப்பப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுபோன்ற வெறுப்பு அரசியல் பரப்பப்பட்டது. திமுக, அதிமுக இரு துருவங்களாக ஆகிவிட்ட பிறகும் இரு கட்சிகளுக்கும் எதிராக தொடர்ந்து தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகிறது. துரோகம், சூழ்ச்சி, வஞ்சகம் நிறைந்த இந்த அரசியலில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு தவெகவை நாங்கள் விமர்சனம் செய்தோம். தேர்தலுக்குப் பிறகு எங்களை நாடி வந்தபோது ஆதரவளித்திருக்கிறோம். பாஜவை தமிழ்நாட்டில் எந்த சூழ்நிலையிலும் உள்ளே வர அனுமதிக்க மாட்டோம். அரசு பதவியை விட்டு விலகுவதற்கு தான் அனுமதி கடிதம் கொடுத்து விட்டு வர வேண்டும். ஆனால், அரசியல் கட்சியில் இருந்து வெளியேற அந்த நிலை இல்லை. ஆனால், அண்ணாமலை அந்த கட்சியை விட்டு வெளியே வருவதற்கு அனுமதி கேட்டு விட்டு வந்திருக்கிறார். அவர் பாஜவின் முகமாக இருந்து விடக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
* பாஜ முகமூடியுடன் அண்ணாமலை
‘‘தமிழ்நாட்டில் பாஜ நேரடியாக அரசியல் செய்ய முடியாது என்பதால், அண்ணாமலை மூலம் பாஜ, ஆர்எஸ்எஸ் இறக்கி விடப்பட்டு இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. அண்ணாமலை அரசியலுக்கு வருவது பிரச்னை இல்லை. ஆனால், ஆர்எஸ்எஸ் முகமூடியுடன் வருவதுதான் இங்கு பிரச்சனை. மேற்கு வங்காளத்தில் நடந்தது போல தமிழ்நாட்டில் நடந்து விடக்கூடாது என்று கவலைப்படுகிறோம்’’ என்று திருமாவளவன் கூறினார்.
