மெல்போர்ன்: பிரதமர் மோடி 3 நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி இந்தோனேசியா பயணத்தை முடித்து கொண்டு, கடந்த 8ம் தேதி ஆஸ்திரேலியா சென்றார். அங்கு நேற்று முன்தினம் மெல்போர்ன் நகரில் உள்ள அரசு மாளிகையில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் மற்றும் உயரதிகாரிகளை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில், இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்வது, இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்கு ஆதரவளிப்பது உள்பட 18 முக்கிய ஒப்பந்தங்களில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் கையெழுத்திட்டன.
ஆஸ்திரேலியா பயணத்தின் நிறைவு நாளான நேற்று பிரதமர் மோடி அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் ஆங்கஸ் டெய்லரை சந்தித்தார். அப்போது இரு தரப்பு உறவுகள் பற்றி இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து ஆஸ்திரேலிய பயணத்தை முடித்து கொண்ட பிரதமர் மோடி, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனின் அழைப்பை ஏற்று நேற்று நியூசிலாந்து புறப்பட்டு சென்றார். தலைநகர் ஆக்லாந்து விமான நிலையத்தில் இறங்கிய மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் விமான நிலையத்துக்கே வந்து வரவேற்றார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் ஒருவரையொருவர் ஆரத்தழுவி தங்கள் அன்பை பகிர்ந்து கொண்டனர். அத்துடன் அந்நாட்டு அமைச்சர்கள், நியூசிலாந்து வாழ் இந்தியர்கள் உள்ளிட்டோர் மோடியை வரவேற்றனர். கடந்த 40 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் நியூசிலாந்து நாட்டுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பயணத்தின்போது, இரு தரப்பு உறவுகள், வர்த்தகம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பிரதமர் மோடியும், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனும் ஆலோசனை நடத்த உள்ளனர். மேலும், வணிக மற்றும் விளையாட்டுத்துறை பிரமுகர்களை சந்திக்க உள்ள பிரதமர் மோடி, இந்திய சமூகத்தினர் பெருமளவில் பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
