வேலூரில் ரூ.40 லட்சம் மோசடி செய்து பெண்ணுக்கு கொலை மிரட்டல் விசிக மாவட்ட செயலாளர் கைது

வேலூர்: வேலூர் குட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஷீலா. இவரது குடும்பத்துக்கு சொந்தமான இடம் அப்துல்லாபுரம்- தெள்ளூர் சாலையில் உள்ளது. ஷீலாவுக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் இந்த இடம் தொடர்பான பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஷீலாவிடம் ஏற்கனவே கார் டிரைவராக பணியாற்றிய சந்தோஷ்குமாரிடம், ஷீலா தனது குடும்ப சொத்து பிரச்னை குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து ஷீலாவை அணைக்கட்டு தொகுதி விசிக மாவட்ட செயலாளர் கோட்டி என்கின்ற கோவேந்தனிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அப்போது கோட்டி இட பிரச்னை தீர்வு செய்து தருவதாக கூறி பல்வேறு கட்டங்களாக மொத்தம் ரூ.40 லட்சம் வரை பெற்றதாக கூறப்படுகிறது. அதேபோல் சந்தோஷ்குமாரும் அதில் ரூ.8 லட்சம் வாங்கியுள்ளாராம். ஆனால் பல நாட்கள் ஆகியும் பிரச்னைக்கு தீர்வு காணவில்லையாம். இதனால் பணத்தை திருப்பி கேட்ட ஷீலாவுக்கு கோட்டி மற்றும் சந்தோஷ்குமார் உட்பட சிலர் ஷீலாவுக்கு பணத்தை திருப்பி தர முடியாது என்று கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஷீலா வேலூர் தெற்கு போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசிக மாவட்ட செயலாளர் கோட்டி மற்றும் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட நிர்வாகியுமான சந்தோஷ்குமாரை நேற்று மாலை கைது செய்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டதை அறிந்த விசிக, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியினர் வேலூர் தெற்கு காவல் நிலையத்தின் முன்பு குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட கோட்டியை மருத்துவ பரிசோதனைக்காக வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: