மதுரை: அனைத்து மகளிர் காவல் நிலையங்களின் செயல்பாடுகள் கவலையளிக்கும் விதமாக கூறியுள்ள ஐகோர்ட் கிளை நீதிபதி, சமரசம் செய்ய நீங்கள் பஞ்சாயத்துதாரரா? என கேள்வி எழுப்பி இன்ஸ்ெபக்டர் மற்றும் எஸ்ஐக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்த ஒருவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் சீனியர் இன்ஜினியராகப் பணிபுரியும் ஒருவருக்கும், எனது மகளுக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஏப்ரலில் நடந்தது.
நிச்சயதார்த்தத்தின்போதே மாப்பிள்ளை வீட்டார் ரூ.10 லட்சம் வரதட்சணையாகப் பெற்றுள்ளனர். ஜூன் 8ம் தேதி திருமணம் நடக்கவிருந்த நிலையில், மாப்பிள்ளை வீட்டார் கூடுதலாக வரதட்சணை கேட்டு மிரட்டினர். எங்களது இயலாமையை தெரிவித்ததால், மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை ரத்து செய்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்.
ஆனால், போலீசார் சட்டப்படி வழக்குப்பதிவு செய்வதற்கு பதிலாக, காவல் நிலையத்திலேயே கட்டப்பஞ்சாயத்து நடத்தி, மாப்பிள்ளை வீட்டாரிடமிருந்து ரூ.5 லட்சத்தை மட்டும் பெற்றுத் தந்தனர். மீதி பணத்தை அடுத்த மாதம் வாங்கிக் கொள்ளலாம் எனக் கூறி வழக்குப்பதிவு செய்யாமல் புகாரை முடித்துவிட்டனர். எனவே, இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எல்.விக்டோரியா கவுரி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வனிஷா ஆஜரானார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு அரசு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போன்ற திட்டங்களை எடுத்து வரும் நிலையில், சில அனைத்துப் மகளிர் காவல் நிலையங்களின் செயல்பாடுகள் அதற்கு நேர்மாறாக, கவலையளிக்கும்விதமாக உள்ளன.
வரதட்சணை கொடுமை என்பது சமுதாயத்தீமை. புகாரில் குற்றம் நடப்பதற்கான ஆதாரங்கள் இருக்கும்போது, காவல்துறையினர் தங்களை பஞ்சாயத்தாராகவோ அல்லது தனியார் மத்தியஸ்தர்களாகவோ நினைத்துக் கொண்டு பணப்பரிமாற்ற சமரசம் பேசக் கூடாது. சட்டத்தை நிலைநாட்டுவது தான் காவல்துறையின் கடமையே தவிர, அதை நீர்த்துப்போகச் செய்வது அல்ல.
கடமை தவறியதற்காக ஆலங்குளம் அனைத்துப் பெண்கள் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்ஐ ஆகிய இருவரும் தலா ரூ.1 லட்சம் அபராதத் தொகையை, ஐகோர்ட் மதுரை கிளை வளாகத்தில் உள்ள சித்த மருத்துவ மைய வங்கிக் கணக்கில் ஜூலை 13க்குள் செலுத்த வேண்டும். இந்த புகாரில் ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை? புகாரை சமரசமாக முடிக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்பது குறித்து விரிவான விளக்கத்துடன் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் ஜூலை 14ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனக்கூறி விசாரணையை தள்ளி வைத்தார்.
