தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே வேறு ஒரு நபருடன் மனைவி பைக்கில் சென்றதை பார்த்ததால் மனமுடைந்த லாரி டிரைவர் தனது மகள், மகன் இருவரையும் எலக்ட்ரிக் ஷாக் வைத்து கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை சிறுபாடு சவேரியார்புரத்தை சேர்ந்தவர் அந்தோணிமுத்து(75). இவரது மகன் மரியமைக்கேல்(45), லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சபிதாரோனிகம்(39).
இவர்களுக்கு மகள் மரியநிரோஷா(14), மகன் கெனிஸ்டன்(12) இருந்தனர். மரியநிரோஷா அங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். மரிய கெனிஸ்டன்(12), 7ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கூட்டுடன்காடு பகுதியை சேர்ந்த ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு கடந்தாண்டு சபிதாரோனிகம், கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மரிய மைக்கேல், தந்தை மற்றும் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். மேலும் இவரால் குழந்தைகளை விட்டுவிட்டு டிரைவர் வேலைக்கு செல்ல முடியாமல் பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
குழந்தைகளை தவிக்கவிட்டு தனது மனைவி பிரிந்து சென்றதால் மிகுந்த மனஉளைச்சலுடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு குழந்தைகளுக்கு சிக்கன் பிரியாணி உள்ளிட்ட உணவுகளை வாங்கி கொடுத்த மரியமைக்கேல், இரவு வீட்டுக்குள் குழந்தைகளுடன் தூங்கியுள்ளார். வெளியில் அவரது தந்தை அந்தோணிமுத்து படுத்து இருந்தார். நள்ளிரவில் குழந்தைகள் தூங்கிய பிறகு, அவர்களது கை, கால்களில் மின்சார வயரை சுற்றி எலக்ட்ரிக் ஷாக் கொடுத்துள்ளார்.
இதில் 2 குழந்தைகளும் உடலில் மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து இறந்துள்ளனர். அதன்பிறகு குழந்தைகள் இறந்ததை உறுதி செய்த மரிய மைக்கேல், தனது காலில் மின்சார வயரை சுற்றிக் கொண்டு சுவிட்சை இயக்கி மின்சாரத்தை பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று மதியம் வரை மகன் மற்றும் பேரக்குழந்தைகள் வெளியில் வராததால் அந்தோணிமுத்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பூட்டிய கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு மின்சாரம் பாய்ந்து 3 பேரும் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது அவரது உறவினர்கள், ‘‘ஓராண்டுக்கு முன்பு மனைவி பிரிந்து சென்றாலும், மரியமைக்கேல் மனம் உடைந்தது தெரியாமல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கூட மகள் மரியநிரோஷாவுக்கு சடங்கு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி முடித்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் அவரது மனைவி வேறு ஒரு நபருடன் பைக்கில் சென்றதை பார்த்ததாகவும், இதனால் மன உளைச்சல் அதிகமாகி குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்துள்ளார்’’ என்று தெரிவித்தனர். இதன் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.
