வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள பெல்லெவ்யூ நகரில் வசிப்பவர் அவினாஷ் நர்னே. அமேசானில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றுகிறார். இவரது மனைவி ராஜிதா சப்பினேனி (27). பெற்றோர் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்ட 4 மாதத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் வீட்டு குளியலறையில் ராஜிதா உயிரிழந்து கிடந்தார். இதனால் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
நர்னேவின் செல்போன், சமூக ஊடக கணக்குகள் ஆகியவற்றை ஆய்வு செய்ததில் அவர் இந்தியாவில் உள்ள ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. திருமணத்திற்கு பிறகும் தனது காதலியுடன் தொடர்பில் இருந்த நர்னே திட்டமிட்டு மனைவியை கொன்று நாடகமாடி உள்ளார். போலீசார் வருவதற்குள் ஆதாரங்களை மாற்றி வைத்துள்ளார். இறந்த மனைவியின் சடலத்தை புகைப்படம் எடுத்து காதலிக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி உள்ளார். இதைத் தொடர்ந்து நர்னே மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
