தனது கட்சியின் கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளை முதல்வர் விஜய் கட்டுப்படுத்த வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, கிராமப்புற பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தில், தான் சிபாரிசு செய்யும் நபர்களுக்கு தான் வேலை கொடுக்க வேண்டுமென கூறி, அத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே வேலை செய்து கொண்டிருக்கும் பெண்களிடம் தவெக நிர்வாகி ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டியதாக வெளியாகியுள்ள காணொலி கடும் அதிர்ச்சியளிக்கிறது.

விபி ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு சுமார் ரூ.2000 கோடிக்கும் அதிகமான நிதி முதல் தவணையாக ஒதுக்கப்பட்டுள்ள நற்செய்தியை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையிலே, ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகியே இப்படியொரு கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது மட்டுமன்றி ஜோசப் விஜய்யின் அரசின் மீதான நம்பிக்கையையே கேள்விக்குறியாக்குகிறது. இவர்களைப் போன்ற நிர்வாகிகளால் தற்போதைய தவெக ஆட்சியிலும் ‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் முழுப் பலன்கள் தகுதியான பயனாளர்களை சென்றடையுமா என்ற சந்தேகம் எழுகிறது.

எனவே, ஆட்சியில் இருக்கும் ஆணவத்தில் அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், அரசு வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவைகளில் அளவில்லாமல் அட்டூழியம் செய்து கொண்டிருக்கும் தனது கட்சியின் ஆச்சரியக்குறிகளை கட்டுக்குள் வைப்பதோடு, மத்திய அரசு வழங்கும் நலத்திட்டங்கள் எவ்வித பாகுபாடுமின்றி அனைத்து தமிழக மக்களையும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டுமென முதல்வர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன்.

* தூய்மைப்பணியாளரை இழிவுபடுத்துவதா?
நயினார் நாகேந்திரனின் மற்றொரு பதிவில் ‘‘சென்னை மதுரவாயல் தவெக எம்எல்ஏ அலுவலக திறப்பு விழாவின் போது, அங்குள்ள தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு எச்சில் இலைகளை அள்ள வைத்த சம்பவம் அதிர்ச்சியையும் மனவேதனையையும் அளிக்கிறது. நம் சமூகத்தைச் சுத்தமாக வைத்திருக்க அரும்பாடுபடும் தூய்மைப் பணியாளர்களின் கண்ணியத்தை காலில் போட்டு மிதிக்கும் இந்த செயலைத் தமிழக பாஜ சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தூய்மைப் பணியாளர்களை இழிவுபடுத்தியவர்கள் மீது முதல்வர் விஜய் தயக்கமின்றி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் தொடராத வண்ணம், தூய்மைப் பணியாளர்களின் சுயமரியாதையையும் உரிமைகளையும் பாதுகாக்க தவெக அரசு உறுதியான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: