சென்னை: பொறியியல் பட்டதாரிகளில் சுமார் 50 சதவீதம் பேர் வேலைவாய்ப்பிற்குத் தேவையான திறன்களைக் கொண்டிருக்கவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் சார்பில் நடைபெற்ற “எதிர்கால பொறியியல் பாடத்திட்டம் பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துதல்” குறித்த கருத்தரங்கினை உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் விஸ்வநாதன் பேசியதாவது: தமிழ்நாட்டில் நிறைய பொறியியல் கல்லூரிகள், ஆய்வகம், உள்கட்டமைப்புகள் உள்ளன. கல்லூரியில் சேரும் மாணவர்கள் குறைவாகவே வேலைவாய்ப்பு பெற்று வெளியேறுகின்றனர். மதுரை மண்டலத்தில் பார்த்தால், பல பட்டதாரி இளைஞர்கள் தங்களது கிராமத்திலேயே நேரத்தை கழிக்கின்றனர். மேலும் பட்டம் பெற்றவர்கள் வேலைவாய்ப்பிற்கு தகுதியானவர்களாக இல்லை.
நமது பொறியியல் பட்டதாரிகளில் சுமார் 50 சதவீதம் பேர் வேலைவாய்ப்பிற்குத் தேவையான திறன்களைக் கொண்டிருக்கவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும். தேசிய அளவிலான ஆய்வுகள் கவலைக்கிடமான நிலையைச் சுட்டிக்காட்டுகின்றன. அவற்றின்படி, பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் தகுதி இன்னும் குறைவாக உள்ளது. இந்திய அரசின் தரவுகளின்படி, தமிழ்நாட்டில், உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் ( ஜிஇஆர்)சுமார் 50 சதவீதமாக உள்ளது.
அதாவது, மாணவர்களை பொறியியல் கல்லூரிகளில் சேர்ப்பதில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு ஒப்பீட்டளவில் சிறப்பாக உள்ளது. ஆனால், தமிழ்நாடு வழங்கும் கல்வியின் தரத்தைப் பொறுத்தவரை, மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் சிறந்த நிலையில் இல்லை. அந்த அளவுகோலில் நாமும் மற்ற மாநிலங்களைப் போலவே இருக்கிறோம்.
கல்வித் தரம் என்ற விஷயத்தில் அனைவரும் ஒரே படகில் தான் பயணித்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் உயர்க்கல்வித்துறை செயலர் அருண்ராய், கல்லூரிக் கல்வி ஆணையர் பொன்னையா, தொழில் நுட்பக் கல்வி இயக்குநர் ரத்தினசாமி, தமிழ்நாடு உயர்கல்வி மன்ற துணைத்தலைவர் விஜய குமார் மற்றும் பல்கலைக் கழக பேராசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
