கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரிப்பு; தமிழகத்தில் அரிசி விலை திடீர் உயர்வு: ஏழை, நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சி

சென்னை: நெல்விளைச்சல் குறைவு, லாரி வாடகை கட்டணம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் தமிழகத்தில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரித்துள்ளது. பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் சீரக சம்பா அரிசி விலை மட்டும் ஓராண்டில் ரூ.96 எகிறியது. அரிசி விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை நெற் களஞ்சியம் என்று அழைக்கப்படும் தஞ்சை மாவட்டத்தில் நெல் விவசாயம் என்பது அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

அதே போல திருச்சி, நாகப்பட்டினம், ஆரணி, திண்டிவனம், ஈரோடு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல் விளைச்சல் கணிசமாக இருந்து வருகிறது. இது போக ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஆண்டுக்கு 30 லட்சம் டன் உயர் ரக சன்ன அரிசி தமிழகத்திற்கு விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் சில இடங்களில் மழை இல்லாததால், உயர் ரக சன்ன நெல் விளைச்சல் பாதித்துள்ளது.

அது மட்டுமல்லாமல் ஆந்திரா, தெலங்கானாவில், கடந்த பருவத்தில் நெல் விளைச்சல் குறைந்துள்ளது. கோடை மழை மற்றும் தற்போதைய பருவமழை கை கொடுக்காததால், கோடை மகசூலும், தற்போதைய குறுவை சாகுபடியும் பொய்த்து வருகிறது. தமிழக, கர்நாடகா அணைகளில் நீர் குறைவாக உள்ளதால், குறுவை சாகுபடியை உறுதி செய்ய முடியவில்லை. இதனால் தமிழகத்திலும் நெல் விளைச்சல் என்பது பாதிக்கப்பட்டுள்ளது. இது தவிர லாரி வாடகை கட்டணம் என்பது 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

நெல் விளைச்சல் குறைவு, லாரி வாடகை கட்டணம் உயர்வு போன்ற காரணங்களால் அரிசி விலை தற்போது அதிரடியாக உயர தொடங்கியுள்ளது. அதாவது சாதாரண ரக அரிசி முதல் உயர்தர அரிசி வரை கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை விலை உயர்ந்துள்ளது. இதில் உச்சகட்டமாக, பிரியாணி போன்ற உணவுகளுக்குப் பயன்படுத்தப்படும் சீரக சம்பா அரிசியின் விலை கடந்த ஆண்டு கிலோ ரூ.84 ஆக இருந்தது. இது தற்போது ரூ.180 ஆக கிடு,கிடுவென உயர்ந்துள்ளது. அரிசி தட்டுப்பாடு காரணமாக, சில்லரை விற்பனையில் ஏரியாவிற்கு தகுந்தார் போல் கூடுதல் விலை வைத்தும் சிலர் விற்கின்றனர்.

அரிசியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. நெல் உற்பத்தி குறைவு மற்றும் இருப்பு பற்றாக்குறை காரணமாக, வரும் காலங்களிலும் அரிசி விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் எச்சரித்துள்ளனர். இது குறித்து அரிசி ஆலை உரிமையாளர்கள் கூறுகையில், ‘‘கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இருந்து, அதிகளவில் சன்ன ரக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அந்த மாநிலங்களில், நெல் இருப்பு குறைவாக உள்ளது.

இதனால் அங்குள்ள ஆலைகளின் தேவைக்கு போகவே, எங்களுக்கு நெல் தமிழகத்திற்கு கிடைக்கிறது. சில மாதங்களில், 1 கிலோ நெல்லுக்கு, 10 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இது தவிர லாரி வாடகையும் உயர்ந்துள்ளது. இதில், அதிகளவில் ஏற்றுமதியாகும் சீரக சம்பா அரிசி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.84 ஆக இருந்தது. இது தற்போது, ரூ.180 என விற்கப்படுகிறது. ஓராண்டில் மட்டும் கிலோவுக்கு ரூ.96 வரை உயர்ந்துள்ளது.

வறட்சி, போதிய மழைப்பொழிவு இல்லாதது மற்றும் சன்ன ரக நெல் உற்பத்தி குறைவால் அரிசி விலை மேலும் அதிகரிக்கும்’’ என்றனர். இந்த அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்தவும், ஏழை எளிய மக்களுக்கு மேலும் சுமை ஏற்படுவதை தடுக்கும் வகையில் மலிவு விலையில் தரமான அரிசி தடையின்றி கிடைக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* சாதாரண ரக அரிசி முதல் உயர்தர அரிசி வரை கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை விலை உயர்ந்துள்ளது.

* பிரியாணி போன்ற உணவுகளுக்குப் பயன்படுத்தப்படும் சீரக சம்பா அரிசியின் விலை கடந்த ஆண்டு கிலோ ரூ.84 ஆக இருந்தது. இது தற்போது ரூ.180 ஆக கிடு, கிடுவென உயர்ந்துள்ளது.

* அரிசியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

* நெல் உற்பத்தி குறைவு மற்றும் இருப்பு பற்றாக்குறை காரணமாக, வரும் காலங்களிலும் அரிசி விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் எச்சரித்துள்ளனர்.

Related Stories: