செங்கல்பட்டில் திடீர் நிலநடுக்கம்

* சாலையில் குவிந்த பொதுமக்கள் .

* ஐடி கம்பெனிகள் மூடல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே நேற்று மா திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால், பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடிவந்து சாலையில் திரண்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு அடுத்த மகிந்திரா சிட்டி பகுதியில் ஏராளமான ஐ.டி. மற்றும் சாப்ட்வேர் கம்பெனிகள் உள்ளன. இந்நிலையில், நேற்று மாலை 4.50 மணிக்கு இப்பகுதியில் திடீரென லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த ஐ.டி. மற்றும் சாப்ட்வேர் கம்பெனி ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு கட்டிடங்களில் இருந்து வெளியே ஓடி வந்து, சாலையில் திரண்டனர். இந்த நிலஅதிர்வு சுற்றுப் பகுதிகளான தென்மேல்பாக்கம், அஞ்சூர், வீராபுரம், குன்னவாக்கம், பட்டரைவாக்கம், மலையம்பாக்கம், பரனூர், சிங்கபெருமாள் கோவில் போன்ற பகுதிகளிலும் உணரப்பட்டது.

இதனால், கம்பெனிகள் மூடப்பட்டு ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அடுக்குமாடி குடியிருப்புகளை சேர்ந்த மக்கள் வீடுகளுக்கு திரும்பாமல் நீண்ட நேரம் சாலையில் குவிந்து இருந்தனர். லேசான நில நடுக்கம் என்பதால், பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘மாலை 4.50 மணிக்கு திடீரென ஒரு அதிர்வு ஏற்பட்டதை உணர முடிந்தது. அருகில் ஏதோ வெடிவைக்கப்படுவதால் இப்படி உள்ளது என நினைத்தோம். ஆனால், அலமாரி மற்றும் டேபிள் மீது இருந்த பொருட்கள் சிதறி விழுந்ததால், அச்சம் ஏற்பட்டு வெளியே ஓடிவந்தோம். சுற்றுப் பகுதிகளில் உள்ளவர்களை தொடர்புகொண்டு விசாரித்தபோது, இதையே தெரிவித்தனர்,’ என்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: