இதுதொடர்பாக ஒன்றிய எரிசக்தி திறன் பணியகம் தெரிவித்த தகவல்படி இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஏசிகள் தற்போது 20 முதல் 21 டிகிரி செல்சியஸ் வரை அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சிறந்த ஆறுதல் வரம்பு 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் ஆகும். ஆனால் கோடைக்காலத்தில் பெரும்பாலான வீடுகளில் ஏசி பயன்பாடு 20 டிகிரிக்கு கீழே சென்று விடுகிறது. எனவே ஆற்றல் பயன்பாட்டை சமநிலைப்படுத்த ஏர் கண்டிஷனர்களை 24 முதல் 25 டிகிரி செல்சியஸில் அமைக்க வேண்டும். வெப்பநிலையை மிகக் குறைவாக அதாவது சுமார் 20 முதல் 21 டிகிரி செல்சியஸ் வரை வைத்திருப்பது மின்சாரத்தை வீணாக்குகிறது. ஏசி வெப்பநிலையை 1 டிகிரி மட்டும் உயர்த்துவது சுமார் 6 சதவீத மின்சாரத்தை சேமிக்க முடியும். அதை 20 டிகிரி செல்சியஸிலிருந்து 24 டிகிரி செல்சியஸாக அதிகரிப்பது 24 சதவீதம் வரை ஆற்றல் சேமிப்புக்கு வழிவகுக்கும். இந்தியாவில் ஆண்டுதோறும் ஒன்றரை கோடி புதிய ஏசிக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அடுத்த பத்தாண்டுகளில் மேலும் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
எனவே ஏசி பயன்படுத்த மட்டுமே 2030 ஆம் ஆண்டுக்குள் 120 ஜிகாவாட் உச்ச மின் தேவையையும், 2035 ஆம் ஆண்டுக்குள் 180 ஜிகாவாட் ஆகவும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவித்து இருந்தது. இதனால் 20 டிகிரி முதல் 28 டிகிரி வரைக்குள் பயன்படுத்ததாக ஏசிக்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதுபற்றி ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் கூறுகையில்,’ 20 டிகிரி செல்சியஸ் முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலான ஏர் கண்டிஷனர் வெப்பநிலை வரம்பை இந்தியாவில் உடனே செயல்படுத்த வாய்ப்பில்லை. காலப்போக்கில் அது படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும். குறிப்பாக சொல்லப்போனால் 2050 க்குப் பிறகுதான் ஏற்படக்கூடும் என்று நினைக்கிறேன்’ என்றார்.
The post 20 முதல் 28 டிகிரி செல்சியஸ் தாண்டினால் ஏசி பயன்பாடுக்கு தடை விதிக்கப்படுமா? ஒன்றிய அரசு புதிய தகவல் appeared first on Dinakaran.
