தகவல் தொடர்பு உள்ளிட்ட நவீன வசதிகளுடன் ஹைவேவிஸ் மலைப்பகுதி மேம்படுத்தப்படுமா?

*சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்ப்பு

சின்னமனூர் : சின்னமனூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள 7 மலைக்கிராமங்கள் போதிய தகவல் தொடர்பு வசதியின்றி தனித்தீவாக மாறி வருகிறது. செல்போன் டவர் இருந்தும் சிக்னல் இல்லை. லேண்ட் லைனும் சரியாக வேலை செய்வதில்லை. இதனால், அவசர காலங்களில் தகவல்களை பரிமாற முடியாமல் மலைக்கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, நவீன டவர்களை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ஹைவேவிஸ் பேரூராட்சி உள்ளது. இங்கு ஹைவேவிஸ், மணலாறு, மேல்மணலாறு, கீழ்மணலாறு, வெண்ணியாறு, மகாராஜன்மெட்டு, இரவங்கலாறு என 7 மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 8,500 பேர் வசித்து வருகின்றனர். இந்த மலைக்கிராமங்களில் தேயிலை, ஏலம், காப்பி, மிளகு,
ஆரஞ்சு உள்ளிட்ட பணப்பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன.

இந்த ஊர்களுக்கு சின்னமனூரிலிருந்து இரண்டு அரசு பஸ்கள் மற்றும் ஒரு தனியார் பஸ் என மூன்று பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொன்றும் தலா 3 முறை மலைக்கிராமங்களுக்கு சென்று திரும்புகிறது. இங்குள்ள மேகமலை வனப்பகுதியில் வரிப்புலி, சிறுத்தை புலி, யானைக் கூட்டங்கள், காட்டு மாடுகள், சிங்கவால் குரங்குகள், மனித கரடிகள், அரிய வகை பாம்பு இனங்கள், கேளையாடுகள், மான் கூட்டங்கள், அரியவகை பறவைகள் வாழ்ந்து வருகின்றன. சின்னமனூர் வனத்துறை கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருந்து வருகிறது.

2008ல் சுற்றுலாத் தலமாக அறிவிப்பு

ஹைவேவிஸ் பேரூராட்சியை கடந்த 2008ல் சுற்றுலாத் தலமாக தமிழக அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து 2011ம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் கோடை விழாவும் நடத்தப்பட்டது. இதனால், தமிழகம் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலிருந்தும் அழகு மிகுந்த சுற்றுலாத் தலத்தை கண்டுகளிக்க சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் காலை 6 மணிக்கு தென்பழனி மலையடிவாரத்தில், வனத்துறை சோதனைச் சாவடியில் கையெழுத்து போட்டுவிட்டு, மலைச்சாலை வழியாக ஹைவேவிஸ் சென்று மலைப்பகுதிகளை சுற்றிப் பார்த்துவிட்டு, மீண்டும் மாலை 6 மணிக்கு தரை இறங்கி சோதனைச் சாவடியில் கையெழுத்து போட்டுவிட்டு சொந்த ஊர் செல்கின்றனர். தென்பழனி சோதனைச் சாவடிக்கு மாலை 6 மணிக்கு மேல் வரும் சுற்றுலாப் பயணிகள் மலைக்கிராமங்களுக்கு செல்ல அனுமதிப்பதில்லை.

டவர் உண்டு: சிக்னல் இல்லை

7 மலைக்கிராமங்களுக்கு மையப் பகுதியாக ஹைவேவிஸ் உள்ளது. இங்குள்ள ஹைவேவிஸ் பேரூராட்சி அலுவலகம் அருகே, அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் பி.எஸ்.என்.எல் தொலைத் தொடர்பு அலுவலகம் உள்ளது. 7 மலைக்கிராமங்களுக்கும் லேண்ட் லைன் இணைப்புகள் வழங்கப்பட்டும் சரிவர சிக்னல் கிடைக்காததால், அரைகுறை பயன்பாட்டில் தான் உள்ளது. கடந்த 2007ல் செல்போன் டவர் அமைக்கப்பட்டது. இருப்பினும் செல்போன்களுக்கு சிக்னல் கிடைப்பதில்லை. ஒரு சில இடங்களுக்கு மட்டுமே செல்போன் சிக்னல் கிடைக்கிறது. பெரும்பாலான நேரங்களில் மலைச்சாலையை கடந்து சின்னமனூர் வந்தால் மட்டுமே போன் வேலை செய்கிறது.

இதனால், அவசர காலங்களில் தொடர்பு கொள்ள முடியாத தனித்தீவாக மலைக்கிராமங்கள் மாறி வருகின்றன. 4ஜி, 5ஜி என தகவல் தொடர்பு மாறி வரும் நிலையில் ஹைவேவிஸ் பேரூராட்சியில் 2ஜி கூட இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.ஹைவேவிஸ் பேரூராட்சியில் சுற்றுலாவை மேம்படுத்த தகவல் தொடர்பு முக்கியமாகும். பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு நிர்வாகம், 7 மலைக்கிராமங்களுக்கு செல்போன் டவர் அமைத்து தகவல் தொடர்புகளை விரிவுபடுத்த வேண்டும் மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2010ல் செல்போன் டவர் அமைக்க தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் வனத்துறை அனுமதி அளிக்காததால், தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைக்கும் திட்டத்தை கைவிட்டது. எனவே, அரசு மூலமாகவோ, தனியார் நிறுவனம் மூலமாகவோ 7 மலைக்கிராமங்களிலும் செல்போன் டவர் அமைத்து தகவல் தொடர்பு தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனித்தீவான மலைக்கிராமங்கள்

மலைக்கிராம மக்கள் கூறுகையில், ‘ஹைவேவிஸ் சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த தகவல் தொடர்பு மிக அவசியம். தனித்தீவாக இருக்கும் மலைக்கிராமங்களை வெளியூர்களுடன் இணைக்க தகவல் தொடர்பு இன்றியமையாத தேவையாக உள்ளது. பிஎஸ்.என்.எல் நிர்வாகம் 7 மலைக்கிராமங்களிலும் நவீன செல்போன் டவர்களை அமைத்து தடையின்றி சிக்னல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

The post தகவல் தொடர்பு உள்ளிட்ட நவீன வசதிகளுடன் ஹைவேவிஸ் மலைப்பகுதி மேம்படுத்தப்படுமா? appeared first on Dinakaran.

Related Stories: