மீள் நம்முடைய கழிவுகள் எங்கே போகிறது?

நன்றி குங்குமம் தோழி

நாம் உருவாக்கும் கழிவுகள் பற்றி நமக்கு என்ன தெரியும்? நமக்கு நீர் எங்கிருந்து வருகிறது? நம்முடைய கழிவுகள் எல்லாம் எங்கு செல்கிறது? என இந்த அடிப்படையான கேள்விகளுக்கான பதில்களை நாம் யாரும் ேயாசிப்பதில்லை. ஆனால், நாம் அனைவரும் நம்முடைய பூமியை குப்பைத் தொட்டியாக மாற்றி வருகிறோம் என்பது நமக்கு எப்போது புரியப்போகிறது..? இப்படி பல கேள்விகளை நம் முன் அடுக்குகிறார் ஆவணப்பட இயக்குநர் விஷ்ணுப்பிரியா.

திறந்தவெளி கழிப்பிடங்களால் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள், பிளாஸ்டிக் கழிவுகளால் நாம் வருங்காலத்தில் சந்திக்க போகும் பிரச்னைகள், எலக்ட்ரானிக் கழிவுகள், சுற்றுச்சூழல் பிரச்னைகள், பருவ நிலை மாறுபாடுகள் என பல பிரச்னைகள் பற்றியும் அதற்கான தீர்வுகள் குறித்தும் பேசப்படக்கூடிய ஆவணப்படம்தான் ‘மீள்’. இதனை விஷ்ணுப்பிரியா இயக்கியிருக்கிறார். இதற்காக இந்தியா முழுவதும் பயணித்து மக்களோடு மக்களாக தங்கி அவர்களுடன் உரையாடி அதிலிருந்து பிரச்னைகளுக்கான தீர்வுகள் என்ன என பலவற்றையும் தொகுத்திருக்கிறார். தொடர்ச்சியாக கழிவு மேலாண்மை குறித்து பேசியும் எழுதிக் கொண்டிருக்கும் இவர் குழந்தைகளுக்கான புத்தகங்களையும் எழுதி வருகிறார். ‘மீள்’ படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கும் அவரிடம் படம் குறித்து பேசிய போது…

‘‘நான் சிவகாசி பொண்ணு. இப்போ மதுரையில் வசித்து வருகிறேன். என் அப்பாவிற்கு வெளிநாட்டில் வேலை. அதனால் நாங்க குடும்பத்துடன் அங்குதான் சில காலம் இருந்தோம். ஏழாம் வகுப்பு வரை வெளிநாட்டில்தான் படிச்சேன். அதன் பிறகு இந்தியாவிற்கு வந்துட்டேன். இங்கு தான் பள்ளிப்படிப்பினை முடிச்சேன். பள்ளிப் படிப்பு முடிச்சதும் கட்டடக்கலை துறை சம்பந்தமாக படிக்க சென்னை வந்தேன்.

புதுவிதமான கட்டடக்கலை சம்பந்தமாக ஆராய்ச்சி செய்யும் போது தான் மண் சார்ந்த வீடுகள் மேல எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. சுற்றிலும் நகர வாழ்க்கையில வாழ்ந்த எனக்கு கிராமங்கள் மீது ஒரு வித பற்று உண்டானது. அதனால், மண்ணால் கட்டப்பட்ட கட்டடங்கள் குறித்து தேட ஆரம்பித்தேன். அந்த சமயத்தில்தான் தன்னார்வத் தொண்டு நிறுவனமான குக்கூ காட்டுப்பள்ளியினை நிர்வகித்து வரும் சிவராஜ் அண்ணா அவர்களின் அறிமுகம் கிடைச்சது. இவர்கள் செய்யும் பணிகள் எல்லாமே எனக்கு ரொம்ப புதுசாக இருந்தது.

அவர்கள் செய்வது பிடித்தும் போனது. இதற்கிடையில் நான் கட்டடக் கலை குறித்து இளங்கலை படிப்பு முடிச்சிருந்தேன். மேற்கொண்டு இது சார்ந்து படிக்க நான் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல இருந்தேன். அந்த சமயத்தில் காஞ்சிபுரம் அருகில் ஒரு சிறுமியின் இறப்பு குறித்து சிவா அண்ணன் என்னிடம் பேசினார். அந்த சிறுமி உடல்நிலை சரியில்லாமல்தான் இறந்திருக்கிறார். ஆனால், என்ன காரணம் என்று தெரியவில்லை. அது குறித்து தெரிந்து கொள்ள அந்த சிறுமியின் உடலினை, உடற்கூறாய்வு செய்து பார்த்துள்ளனர். அதன் மூலம் ஒரு அதிர்ச்சியான விஷயம் தெரிய வந்துள்ளதாக அண்ணன் கூறினார்.

சிறுமியின் இறப்பிற்கு முக்கிய காரணம் அவளின் திசுக்களில் மலத்துகள்கள் கலந்திருப்பது என்று தெரியவந்தது. சிறுமி வீட்டில் கழிவறை இல்லை. பகலில் ஆண்கள்

நடமாட்டம் இருப்பதால், இருட்டிய பிறகுதான் மறைவிடம் தேடிப் போய் மலம் கழிக்க முடியும். இதனால் மலம் வந்தாலும் அதை அடக்கி, சூரியன் மறையும் வரை காத்திருக்க வேண்டும். இயற்கை உபாதைகளை அடக்கி அடக்கி, உடலிலேயே கழிவுகள் தங்கித் திசுக்களில் கலக்கும் அளவுக்கு நிலை மோசமாகி அதுவே சிறுமியின் உயிருக்கு எமனாக மாறிவிட்டது என்றார். மேலும் என்னிடம், ‘நீ கட்டடக்கலை தானே படிச்சிருக்க… அந்த படிப்பினைக் கொண்டு இந்த மாதிரி கழிவறை இல்லாத மக்களுக்கு ஏதாவது கட்டி கொடுக்க முடியுமா’ன்னு என்னிடம் கேட்டார்.

எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. நான் பிறந்து வாழ்ந்த வீடுகளில் எல்லாமே அறைகளுக்குள்ளேயே கழிப்பறை வச்சு கட்டப்பட்ட வீடுகள். ஆனா, கழிப்பறை இல்லாத வீடுகளும் பள்ளிகளும் இருக்குறது என்பதை நான் அப்போதுதான் கேள்விப்படுகிறேன். அது எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அதன் பிறகுதான் நான் இது சம்பந்தமா தேடத் தொடங்கினேன். அந்தத் தேடலில் எனக்கு மற்றொரு விஷயமும் புலப்பட்டது.

கிராமங்களில் படிக்கும் பெண்களில் பலர் பருவமடைந்ததும் பள்ளிப் படிப்பை விட்டு நின்று விடுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் மாதவிடாய் காலங்களில் அவர்கள் பயன்படுத்த பள்ளிகளில் கழிவறை வசதி இல்லை என்பதுதான். கழிவறை வசதி இருந்தாலும் சுத்தப்படுத்தப்படாமலும், பூட்டப்பட்டு இருப்பது தெரிய வந்தது. சில பள்ளிகளில் கழிவறைகள் ஆசிரியர்களுக்கு மட்டுமே பயன்பாட்டிற்கு இருக்கிறது. ஏன் என தேடிய போது… எல்லா பிரச்னைக்கும் முக்கிய காரணமா தண்ணீர் என்பது தெரிய வந்தது. பொதுவாக நாம் பயன்படுத்தும் வெஸ்டர்ன் கழிவறைகளில் ஒரு தடவை மட்டுமே சுமார் 6 முதல் 8 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுது.

தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் கிராமங்களில் கழிவறை பயன்படுத்த முடியாத சூழல்தான் இன்றும் நிலவி வருகிறது. அதற்காக நாம் கழிவறையை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. இதற்கு மாற்று என்ன என்று யோசிக்க ஆரம்பித்தேன். கேரளாவுல பால் கால்வெட் என்பவர் தண்ணீர் அதிகம் தேவைப்படாத கழிவறையை வடிவமைத்திருப்பது கேள்விப்பட்டேன். அவரை தொடர்பு கொண்டேன். அவர் வடிவமைச்ச கழிவறை ரொம்பவே வித்தியாசமாக இருந்தது.

தண்ணீர் அதிகம் தேவையில்லை. ஆனால், அதன் மூலம் உரங்களை உற்பத்தி செய்யலாம். இந்த மாதிரி கழிவறைகளை மக்கள் கிட்ட கொண்டு செல்லணும்னு முடிவு எடுத்தேன். அதை வாய் வார்த்தையாக சொன்னால் புரியாது என்பதால் விழிப்புணர்வு ஏற்படுத்த வீடியோ எடுக்கலாம்னு ஆரம்பிச்சது ஆவணப்படமா மாறிடுச்சு’’ என்றவர் இந்த ஆவணப்படத்தின் நோக்கம் குறித்து பேசினார்.

‘‘மீள் என்றால் மீண்டு வருதல் என்று அர்த்தம். ஒரு பிரச்னையை தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்காமல் அதற்கான தீர்வுகளை நோக்கி நகர வேண்டும். அதற்கான தொடக்கப் புள்ளியாகத்தான் இந்த ஆவணப்படத்தை பார்க்கிறேன். இதில் ஆச்சரியம் என்னவென்றால் பிரச்னைக்கான தீர்வுகளை மக்கள் பல காலம் பின்பற்றி வந்திருக்கிறார்கள். அப்படியான ஊர்கள்தான் துறையூர், முசிறி. இரண்டுமே திருச்சியில் உள்ளன. இந்தப் பகுதிகளில் இருக்கும் குப்பைமேடுகளை படமெடுக்க போன போதுதான் அங்கே வேலை செய்யும் ஒருவர் நான் கேரளாவில் பார்த்த கழிவறைகளை காட்டினார். அவை பொதுக் கழிப்பிடமாக இருந்தது.

இந்தப் பகுதியில் வாழும் மக்கள் இதைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே, ஒரு நபருக்கு ஒரு ரூபாயை மாநகராட்சி தருகிறது. இதில் சேமிக்கப்படும் கழிவை உரமாக மாற்றி அதை விவசாயிகளுக்கு கொடுக்கிறார்கள். இது குறித்து இந்தியா முழுக்க பயணித்தோம். லடாக்கில் கிராம மக்களும் இதே போன்ற கழிவறைகளை பயன்படுத்து

கிறார்கள். அதிகம் பனி பொழியும் ேபாது, தண்ணீர் உறைந்திடும். வீட்டை விட்டும் வெளியே வர முடியாது என்பதால், இந்த மாற்று ஏற்பாட்டை செய்துள்ளனர்.

மக்களும் சுற்றுப்புறச் சூழ்நிலைக்கு ஏற்ப வாழ ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு இந்தியா முழுக்க உள்ள மாற்றங்களின் தொகுப்பு தான் மீள். மாற்றங்களை மட்டுமே பேசாமல் அந்த மாற்றங்களை கொண்டு வந்த மனிதர்கள் குறித்தும் பேசியிருக்கிறோம். இதற்காகவே இயங்கி வரும் பால் கால்வெர்ட், சுனிதா நாராயண், ராஜேந்திர சிங், வேலூர் னிவாசன் உட்பட பலரின் உரையாடலும் இதில் பதிவு செய்திருக்கிறேன்’’ என்றவர் மீண்டு வரவே முடியாத விஷயங்கள் குறித்தும் விவரித்தார்.

‘‘நாம் மீண்டு வர முடியாத பிரச்னைகளில் முக்கியமானது தண்ணீர் பிரச்னை. குறிப்பாக நகர மக்கள் அதனை சந்திக்கிறார்கள். காரணம், நீர் நிலைகளை நாம அசுத்தப்படுத்தி இருக்கோம். வீட்டிலிருந்து வெளியேறும் குப்பைகள் நீர்நிலை அருகில் தான் கொட்டப்படுகிறது. மேலும் பெரிய நிறுவனங்களிலிருந்து வெளியேறுகிற கழிவுநீர்களும் ஆறுகளில் கலக்கப்படுகிறது. கோவை, மேட்டுப்பாளையம் வழியாக செல்லும் பவானி ஆற்றில் கழிவு நீர் கலக்கப்பட்டு மாசு அடைந்துள்ளது.

அதனை பருகும் பலருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அடுத்து உலகமே சந்திக்கக்கூடிய பெரிய பிரச்னை பிளாஸ்டிக். இதனை என்ன செய்வதுன்னு பல நாட்டு அரசுகள் திணறுகிறார்கள். தமிழ்நாட்டிலும் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கவர்களை தடை செய்தாங்க. இதில் பிரச்னை என்னவென்றால், கார்ப்பரேட் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பிஸ்கெட் பாக்கெட் கவர்களை மறுசுழற்சி செய்ய முடியாது.

அதே சமயம் விற்பனைக்கு வரும் தண்ணீர் பாட்டில்களுக்கும் தடை விதிக்க முடியவில்லை. இதன் தீவிரத்தால் பூமிக்கு வராத குழந்தையும் பாதித்துள்ளது. கார்டியன் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் தாயின் கருவில் வளரும் குழந்தையின் தொப்புள்கொடியில் பாலித்தீன் துகள்கள் இருப்பதை இத்தாலி மருத்துவ அறிஞர்கள் கண்டுபிடிச்சிருக்காங்க. பிளாஸ்டிக்கை கண்டுபிடிச்சு பல ஆண்டுகளுக்கு பிறகுதான் அதன் பாதிப்பினை உணர்கிறோம். இதே மாதிரிதான் எலெக்ட்ரானிக் கழிவுகளும்.

இப்போது மார்க்கெட்டில் இருக்கும் செல்போன்களை அதிகபட்சம் 2 வருடங்கள் மேல் பயன்படுத்த முடியாது. தொழில்நுட்பம் வளர அது நம் தேவையினை அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாம் பயன்படுத்தின அந்த பழைய எலெக்ட்ரானிக் பொருட்கள் மறுசுழற்சி செய்ய முடியாமல் நிலத்திலேயோ அல்லது கடலிலேயோ கொட்டப்படுகிறது. நம் தேவைகளை நாம் அறிந்தால் மட்டுமே இதற்கான தீர்வினை கொண்டுவர முடியும். பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் குறைக்க வேண்டும்.

துணிப்பைகளை பயன்படுத்தலாம். வீட்டில் சேரும் உணவு சார்ந்த பொருட்களை உரமாக்கலாம். பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை தவிர்த்து செம்பு பாத்திரங்களை பயன்படுத்தலாம். இயற்கையின் அமைப்பில் கழிவு என்ற ஒன்றே கிடையாது. அனைத்துமே மறுசுழற்சிக்கு உட்பட்டவை. நாம் உருவாக்கிய பொருட்களுக்கு பெயர்தான் கழிவுகள். இதைப் பற்றிய ஒரு உரையாடலைதான் மீள் செய்யப் போகிறது’’ என்று நம்பிக்கையோடு சொல்கிறார் விஷ்ணுப்பிரியா.

தொகுப்பு : மா.வினோத்குமார்

The post மீள் நம்முடைய கழிவுகள் எங்கே போகிறது? appeared first on Dinakaran.

Related Stories: