சிறுகதை-பிறந்த வீட்டுக் கோடி

நன்றி குங்குமம் தோழி

ஆழ்ந்த உறக்கத்தில் எங்கோ தொலைதூரத்தில் மணி அடிப்பது போல் கேட்டது சுகுமாருக்கு. விடிந்தால் போகிப் பண்டிகை. கடந்த சில நாட்களாக வீட்டை வெள்ளையடிப்பது, சுத்தம் செய்வது என்று ஏகப்பட்ட வேலை பளுவால் கடும் அசதி.திரும்பிப் படுக்கும் போதுதான், அது தலையணை அருகில் வைத்திருந்த தன்னுடைய செல்போனில் இருந்து வருவது உறைத்தது. அறையின் விடிவிளக்கு வெளிச்சத்தில், சுவர் கடிகாரம் மணி அதிகாலை மூன்று என்றது. இந்த விடியற்காலையில் யார் அழைப்பது?

செல்போனை அவசரமாக எடுத்துப் பார்த்தால், அதில் ‘சாவித்திரி’ என்று ஒளிர்ந்தது. தங்கை எதற்கு அழைக்கிறாள்? இப்போது என்ன செய்வது? ஃபோனை எடுத்து பேசுவதா, வேண்டாமா? யோசித்து முடிப்பதற்குள் மணி அடிப்பது நின்றது.அதற்குள், அருகில் தூங்கிக் கொண்டிருந்த மகன் கார்த்திக்கும், கீழே படுத்திருந்த மனைவி சுதாவும், மகள் அனிதாவும் விழித்து விட்டனர்.

‘‘என்னங்க, யார் இந்த நேரத்துல?”
‘‘சாவித்திரி” சொல்வதற்குள் நாக்கு உலர்ந்து போனது.
‘‘எடுத்து பேசுவதற்கு என்னங்க?”
‘‘அவகிட்ட பேசுவதற்கு என்ன இருக்கு?”

இதற்குள் செல்போனில் மெஸேஜ் வந்ததற்கு அறிகுறியாக ‘‘பீப்” சத்தம் வந்தது. கார்த்திக் உடனே எடுத்துப் படித்தான். ‘‘அத்தான் மாரடைப்பால் காலமானார்.”தங்கை சாவித்திரியின் கணவர் இறந்து விட்டாரா? கண்களில் துளிர்த்த கண்ணீரை அடக்க சிரமப்பட்டான் சுகுமார். அத்தான் கால்பந்து விளையாட்டு வீரர். தினமும் எக்ஸர்சைஸ் செய்து, உடலை ஃபிட்டாகத்தான் வைத்திருப்பார். 55 வயசு எல்லாம் ஒரு வயசா?
என்னவாயிற்று?

கார்த்திக் உடனே கிளம்பி விட்டான். ‘‘அம்மா, நான் அத்தை வீட்டுக்கு போறேன்” செருப்பை மாட்டியவாறே சொன்னான். ‘‘எங்கேடா போறே? உனக்கு எல்லாம் மறந்துடுத்தா?” கர்ஜித்தான் சுகுமார். ‘‘அப்பா, பெரியவங்களுக்குள்ள ஆயிரம் விஷயம் நடந்து இருக்கலாம். ஆனா, என்னை சின்ன வயசுல தூக்கி வளர்த்தது அத்தைதான். என்னை தடுக்காதீங்க…” சொல்லியவாறே கதவைத் திறக்க, அப்போதுதான், கேட்டை திறந்து உள்ளே நுழைந்து கொண்டிருந்தான் தங்கை மகன் முகிலன்.
‘‘மாமா…” வெடித்து அழுத முகிலனை அரவணைத்துக் கொண்டாள் சுதா.

‘‘மாமா, திடீர்னு மார்பு வலிக்குதுன்னு அம்மாவை எழுப்பினார் அப்பா. ரெண்டு நிமிஷத்துல அப்படியே சரிஞ்சு விழுந்துட்டார். பக்கத்து வீட்டு டாக்டர் அங்கிள் பார்த்துட்டு, மாஸிவ் ஹார்ட் அட்டாக்னு சொல்லிட்டாரு மாமா… என்ன பண்றதுன்னே தெரியல.”‘‘நீ கார்த்திக் கூட போப்பா. நாங்க இதோ கிளம்பி வரோம்…” சுதா சொல்ல, இருவரும் பைக்கில் கிளம்பி போனார்கள்.
‘‘என்னங்க, வாங்க போகலாம்.

சாவித்திரி பாவம் என்ன பண்றாளோ?”‘‘அந்த திமிர் பிடிச்சவ என்ன செஞ்சா நமக்கென்ன? நான் எங்கேயும் வரல…”‘‘இதெல்லாம் நல்லா இல்லைங்க. எந்த கோபத்தையும் காட்டற நேரமில்லை இது. முதல்ல, நீங்க வாங்க சொல்றேன். நாம போய்தான் பிறந்த வீட்டு கோடி போடணும்…”‘‘ஆமா, நான் குடுக்கப் போற புடவையைதான் அந்த ராங்கிக்காரி கட்டப் போறாளாக்கும். நான் வரலை…”‘‘நீங்க நடந்துக்கற விதம் எனக்கு கொஞ்சமும் பிடிக்கல. நாம வளர்த்த பொண்ணுங்க அவ. எழுந்து வாங்க சொல்றேன்…” சுதா சொல்லச் சொல்ல, ஒன்றும் பேசாமல் உட்கார்ந்திருந்தான் சுகுமார்.

‘‘வாடி அனிதா, உங்க அப்பா மனசு கல்லு. நாம கிளம்பிப் போகலாம். உங்க அப்பா என்ன நினைக்கிறாரோ, அதை செய்யட்டும்…” சொல்லியவாறே ஓலோ ஆட்டோவை புக் பண்ணி, கிளம்பி விட்டாள் சுதா.அவர்கள் கிளம்பியவுடன் வாசற்கதவை மூடவும் மறந்து அழத் தொடங்கினான் சுகுமார். அவன் மனதில் பழைய நிகழ்ச்சிகள் உருண்டோடின.

சுகுமார் – சாவித்திரியின் பிறந்த ஊர் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள குருங்குளம். விவசாயம் தந்தையின் தொழில். சுகுமாரின் அப்பாவிற்கு ஒரே தங்கை செல்லம்மா. அவளின் கணவர் சிவராமன். அவருக்கும் விவசாயம்தான் தொழில். அவர்கள் திருமணம் ஆனதிலிருந்து அவர்களுக்கான பாகமான பக்கத்து வீட்டில் தான் வசித்து வந்தனர். அவர்களுக்கு மூத்த மகன் கணேசன். அதற்கு பிறகு நான்கு பெண் குழந்தைகள்.

அவர்கள் குடும்ப வழக்கப்படி, பொங்கலை அவரவர்கள் வீடுகளில் கோலாகலமாக கொண்டாடுவார்கள். விடியற்காலையில், செல்லம்மா, தன் பெண் குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு வந்து விடுவாள். அம்மா ஜெம்பா, அனைத்து பெண்களுக்கும் முந்தைய நாள் பொங்கல் பானையில் சுற்றியிருந்த மஞ்சள் கிழங்கை அரைத்து, அதை அனைவருக்கும் நெற்றியில் இட்டு, குங்குமமும் வைத்து விடுவாள்.

பிறகு, பெண்கள் அனைவரும் அவளை நமஸ்கரித்து எழுந்து, கொல்லையில் ஒன்று கூடி கணுப்பிடி வைத்து, கணுப் பொங்கலை கொண்டாடுவார்கள். இது உடன் பிறந்த அண்ணன் தம்பிகளுக்காக சகோதரிகள் கொண்டாடும் ஒரு விழா. பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள். அன்று தேங்காய் சாதம், புளியஞ்சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், கற்கண்டு சாதம், அப்பளம், வற்றல், வடகம், துவையல் செய்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவர். அன்றைய தினம் சம்பத், திருமணமான தன் தங்கை வீட்டிற்கு மனைவியுடன் சென்று, வெற்றிலை பாக்கு, பழம், இனிப்பு, காரம், புத்தாடைகள், இயன்ற பணம் வைத்து, சீர் செய்வார்.

பிறகு, இரண்டு வீட்டுப்பிள்ளைகளும் வளர்ந்து, திருமணமாகி, அனைவரும் சென்னையில் செட்டிலாகி, சம்பத், ஜெம்பா, செல்லம்மா ஆகியோர் ஒவ்வொருவராக மறைந்து போனாலும், ஒவ்வொரு கணுப் பொங்கல் அன்றும் அனைவரும் சாவித்திரி வீட்டில் கூடுவர். சுகுமார், சுதா குழந்தைகளுடன் விடியற்காலையிலேயே அங்கே போய் சீர் செய்து, அங்கேயே உணவருந்தி, மாலை வரை அங்கேயே இருந்து விட்டுதான் வீடு திரும்புவர். அத்தையின் மகள்கள் அனைவரும் தங்கள் கணவன்மார்கள், குழந்தைகளுடன் அங்கே கூடி, அவர்கள் அண்ணன் தரும் சீரை பெற்றுக் கொள்வர். அன்று ஒரே குதூகலமாக இருக்கும்.

எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது போன பொங்கல் வரை.அந்த வருட பொங்கலுக்கு, சுகுமாரும், சுதாவும் அலைந்து, திரிந்து, அந்த அபூர்வா புடவையை சாவித்திரிக்காக தேர்ந்தெடுத்தனர். ரொம்ப நாளாக, சாவித்திரி ஆசைப்பட்டு கிடைக்காத வாடாமல்லி நிற புடைவையை வாங்கி, ரவிக்கையும் தைத்து, முன்னரே கொடுத்துவிட்டு வந்திருந்தனர். ஆனால், கணுப் பொங்கல் அன்று, சாவித்திரி அந்தப் புடவையை கட்டிக் கொள்ளவில்லை.

அப்போதே சுகுமாருக்கு ஒரு மாதிரிதான் இருந்தது. பிறகு அனைவரும் சாப்பிட தொடங்கும் போது, சுதாவும், சுகுமாரும் அனைவருக்கும் ஓடி, ஓடி பரிமாறினர். அவர்கள் அனைவரும் சாப்பிட்டு ஆங்காங்கே குழு குழுவாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, சாவித்திரியின் பெரிய நாத்தனார், ‘‘சாவித்திரி, நீ கட்டியிருக்கிற புடவை ரொம்ப நல்லாயிருக்கு. இதுதான் உன் அண்ணன் வாங்கி குடுத்த புடவையா?” என்று கேட்க, ‘‘இல்லை லதா, அவர் எடுத்துக் குடுத்தது வேற” என்று சொல்லி, அதை எடுத்து வந்து காண்பித்தாள் சாவித்திரி. அதற்குள் அடுத்த நாத்தனார், ‘‘இந்தப் புடவை அதை விட சூப்பராயிருக்கு. உங்க அண்ணன் உங்களுக்கு எல்லாமே கிராண்டாதான் பண்ணுவார்” என்று யதார்த்தமாக கூறினாள்.

‘‘அண்ணன் இதை விட கிராண்டா கூட பண்ணுவார். ஆனா, அண்ணன் பொண்டாட்டி செய்ய விட்டா தானே?” எல்லோரும் சாப்பிட்டாயிற்று, நாம் சாப்பிடலாமா? என்று கேட்பதற்காக உள்ளே நுழைய யத்தனித்த சுகுமார் – சுதா இருவரின் காதுகளிலும் அனைத்தும் விழுந்தது. சுதா எதையும் முகத்தில் பிரதிபலிக்கவில்லை. ஆனால், சுகுமாருக்கு இந்த அநியாயப் பழி மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது. ஆனால், நெருங்கிய உறவினர்கள் முன் வீண் வாக்குவாதங்கள் வேண்டாமென,‘‘சாவித்திரி, நாங்க கிளம்பறோம்” என்றான்.

‘‘சரி அண்ணா” என்று கூறினாள் சாவித்திரி.குழந்தைகள் இருவரும் சாப்பிட்டிருந்தாலும், இவர்கள் சாப்பிடவில்லை என்பது சாவித்திரிக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் சாப்பிட சொல்லவில்லை. கை கால் ஓடவில்லை இருவருக்கும். வீட்டிற்கு வந்ததும் புலம்பிக் கொண்டேயிருந்தான் சுகுமார். அவளுக்கு ஏன் இந்த வன்மம்? அவளை நம் மூத்த குழந்தையாகத்தானே நினைத்திருந்தோம்.

அன்று இரவு. படுத்த சிறிது நேரத்தில், ‘‘சுருக் சுருக்” என்று மார்பில் வலி சுகுமாருக்கு. மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினர். எதிர்பாராத அதிர்ச்சியில், ‘‘மைல்ட் அட்டாக்” என்று டாக்டர் கூற, ஒரு வாரம் மருத்துவமனையி லேயே தங்கி சிகிச்சை எடுக்க நேர்ந்தது. அத்தனை சொந்தங்கள் வந்து பார்த்தும், கடைசி வரை, சாவித்திரியும் அத்தானும் வரவேயில்லை. டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தவுடன், சுகுமார் கூறிவிட்டான், ‘‘இனி சாவித்திரி வீட்டு வாசற்படியை மிதிக்க மாட்டேன்” என்று.

வாசலில், ஆட்டோ வந்து நிற்கும் ஓசையில், நினைவலைகளிலிருந்து மீண்டான் சுகுமார்.ஆட்டோவிலிருந்து வயது முதிர்ந்த அத்தானின் அப்பா இறங்குவதைக் கண்டு மனம் துணுக்குற்றது. கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக பெருக்கெடுத்து வழிந்தது. ‘‘டேய் சுகுமார், அன்னிக்கு, உன் தங்கை பேசினதுக்கு நீ மன வருத்தமடைஞ்ச, சரி தான். ஆனா, எப்பவும் சாவித்திரி தான் என் மூத்தக் குழந்தைன்னு வாய்க்கு வாய் சொல்வியே, அது உண்மையாயிருந்தா, அவ தப்பு பண்ணின உடனே, அதை சுட்டிக் காட்டி திருத்தியிருக்கணும்.

அதை விட்டுட்டு, நீ சும்மாயிருந்தது சரியா? உன் குழந்தைகளாயிருந்தா, புத்தி சொல்லி, இல்லைன்னா, அடிச்சாவது திருத்தியிருக்க மாட்டியா? நீ போனவுடன், உன் அத்தான் அதைத்தான் செய்தான். ‘‘பளார்”ன்னு கன்னத்தில் ஒரு அறை விட்டு, ‘‘உன் மன்னி உனக்கு, உன் தாய்க்கு சமம்” ன்னு சொன்னான். உன் மௌனம் செய்யாததை அந்த ஒற்றை அடி சாதிச்சுது. ஒரு நிமிஷம் புத்திக் கெட்டுப் போய் தன் நாத்தனார் குணத்தைக் காண்பிச்ச உன் தங்கை, தன் தவறை, பொட்டில் அடிச்ச மாதிரி உணர்ந்துட்டா. மறு நாளே, நீ மருத்துவமனையில் சேர்ந்ததும், நம்மால்தானே அண்ணனுக்கு இப்படி ஆச்சுன்னு குற்ற உணர்ச்சியில் குமுறினா.

உன்னை பார்க்கிற திராணி கூட இல்லை அவகிட்ட. இப்ப உன் அத்தான் செத்த நொடியிலிருந்து, வெறித்தப் பார்வையோடு, கல்லு மாதிரி உட்கார்ந்திருக்கா. எனக்கு ரொம்ப பயமாயிருக்குடா, அவளுக்கு ஏதாவது ஆகிடுமோன்னு. உன்னுடைய அருகாமை மட்டும்தான் அவளுக்கு ஆறுதல் அளிக்க முடியும். நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். இனி வருவதும், வராததும் உன் விருப்பம்.”

மாமா பேசப் பேச, தன் தவறு சுகுமாருக்கு புரியத் தொடங்கியது. மாமா சொல்வது சரிதானே? நான் ஏன் அவ தப்பா சொன்னவுடனே, எடுத்துச் சொல்லி, புரிய வைக்கல? அவள் என்ன நம்மைப் பற்றி சொல்வது என்ற ஈகோ தானே காரணம்? எவ்வளவு அன்பான அத்தான்! அவருடன் கடைசி காலங்களில் பேச முடியாமல் போக இந்த ஈகோவும், வறட்டு பிடிவாதமும் தானே காரணம்? நேத்து இருந்தவர், இன்று இல்லை என்பது மாமா இறப்பிலேயே தெரிஞ்சுதே” நிமிடத்தில் பலவற்றையும் யோசித்தவன்,
‘‘வாங்க மாமா, நான் உடனே சாவித்திரியை பார்க்கணும்.”

வெளியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை நோக்கி பறந்தான் சுகுமார்.ஆட்டோ சாவித்திரி வீட்டருகில் போய் நிற்க, ஐய்யயோ, பிறந்த வீட்டுக் கோடி எடுக்கணும்னு சுதா சொன்னாளே நான் வாங்கலியே, யோசித்தவாறே ஆட்டோவிலிருந்து இறங்க, வாசலின் அருகேயிருந்த ஹாலின் நடு நாயகமாக, அத்தானின் உடல் கிடத்தப்பட்டிருந்தது. தலைமாட்டில் விளக்கேற்றப்பட்டிருந்தது. கால்மாட்டில், வாசலை நோக்கி வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தாள் சாவித்திரி.

சாவித்திரியின் பார்வை வட்டத்துக்குள், அண்ணன் சுகுமார் விழ, அவ்வளவு நேரம் கல்லாய் அமர்ந்திருந்தவள், ‘‘அண்ணா, அத்தான் நம்மையெல்லாம் ஏமாத்திட்டுப் போயிட்டாரே…” என்று பெருங்குரலெடுத்துக் கதற, அவள் அருகில் அமர்ந்திருந்த தன் மனைவி, பிள்ளைகள், சுற்றத்தார், அத்தானின் உடல் என்று எதுவும், சுகுமாரின் கருத்தில் உறைக்கவில்லை. சாவித்திரி அணிந்திருந்த அந்த வாடாமல்லி நிற ‘‘பிறந்த வீட்டுக் கோடி” கண்களில் பட, கடவுளே, இந்த மாதிரி சந்தர்ப்பத்தில், அந்த புடவையை உடுத்தும் நிலையை உண்டு பண்ணிட்டியே என்ற நினைப்பு தந்த துக்கத்தில் தன்னை மறந்து, கதறி அழத் தொடங்கினான் சுகுமார். அவர்களிடையே மெலிதாக எழும்பியிருந்த ‘ஈகோ’ அங்கே தவிடுபொடியானது.

தொகுப்பு: வி.ஜி.ஜெயஸ்ரீ

The post சிறுகதை-பிறந்த வீட்டுக் கோடி appeared first on Dinakaran.

Related Stories: