மேற்குவங்கத்தில் வாக்காளர்கள் புறக்கணித்த வாக்குச்சாவடியில் 95% வாக்குப்பதிவு: கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிர்ச்சி

கொல்கத்தா: தேர்தலை மக்கள் புறக்கணித்த நிலையில் மேற்குவங்கத்தில் ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் 95 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. இவ்விவகாரம் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 8ம் தேதி நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது, பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்ததால் 20 பேர் பலியாகினர்.

பல இடங்களில் வாக்குச்சாவடிகள் அடித்தும், தீ வைத்தும் எரிக்கப்பட்டன. இதனால் வன்முறையால் பாதிக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவும் நடத்தப்பட்டன. இந்நிலையில் ராஜர்ஹட் மாவட்டம் ஜங்க்ரா ஹதியாரா பஞ்சாயத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண் 2 பகுதியில் வசிக்கும் மக்கள், வாக்குப்பதிவு நாளில் தேர்தலை புறக்கணித்திருந்தனர்.

ஆனால் அந்த வாக்குச்சாவடியில் வாக்குகள் பதிவானதாக புகார்கள் எழுந்தன. வாக்கு எண்ணிக்கை நாளில், அந்த வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளை எண்ணும் போது, அந்த ஒரு வாக்குசாவடியில் மட்டும் 95% வாக்குகள் பதிவாகி இருந்தது. இதுதொடர்பாக சப்தர்ஷி தேவ் என்பவர் மாநில தேர்தல் ஆணையத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இவ்விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், இதுகுறித்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் சப்தர்ஷி தேவ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி அம்ரிதா சின்ஹா, இதுகுறித்து விரிவான விசாரணை நடத்துமாறு டிஜிபி மற்றும் ஐஜிக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக ராஜர்ஹட் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் (பி.டி.ஓ) சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

The post மேற்குவங்கத்தில் வாக்காளர்கள் புறக்கணித்த வாக்குச்சாவடியில் 95% வாக்குப்பதிவு: கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: