மத வழிபாட்டு தலம் சேதம்: காஷ்மீரில் பதற்றம்

ஜம்மு: காஷ்மீரில் மத வழிபாட்டு கூடத்தில் மர்ம நபர் புகுந்து சேதம் விளைவித்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர், ரீயாஸி மாவட்டம் தர்மாரியில் ஒரு மத வழிபாட்டுக்கூடம் உள்ளது. கடந்த சனிக்கிழமை மத வழிபாட்டு கூடத்துக்கு வந்த ஒருவர் அங்கிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இதை அறிந்த அந்த பகுதியில் உள்ளவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து டிஎஸ்பி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.போலீசார் விசாரணை நடத்தி நேற்று முன்தினம் வரை 12 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். நேற்று மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில்,‘‘ இந்த வழக்கில் போலீசுக்கு பல துப்புகள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் குற்றவாளியை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். சட்டம் ஒழுங்கை பராமரிக்க அந்த பகுதியில், போலீஸ் மற்றும் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.

மத வழிபாட்டுகூடத்தின் மீது தாக்குதல் நடந்த சம்பவத்தை கண்டித்து சில அமைப்புகள் நேற்று பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு நகரின் முக்கிய பகுதி வழியாக பேரணி சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாவட்ட கலெக்டர் விசேஷ் பால் மகாஜன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் கூறுகையில், ‘‘இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அமைதியை சீர்குலைக்கவும் வளர்ச்சியை முடக்குவதற்குவதற்கான முயற்சியாகும் இது. யாராவது அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பவர்களை சும்மா விட மாட்டோம்.அமைதியையும் வளர்ச்சியையும் தடுக்க முயற்சிப்பதையும் பொறுத்து கொள்ள முடியாது’’ என்றார்.

The post மத வழிபாட்டு தலம் சேதம்: காஷ்மீரில் பதற்றம் appeared first on Dinakaran.

Related Stories: