மணிப்பூரில் மீண்டும் வன்முறை 3 வாலிபர்கள் சுட்டுக்கொலை

இம்பால்: மணிப்பூரில் நேற்று மீண்டும் வன்முறை ஏற்பட்டது. இதில் 3 வாலிபர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மணிப்பூரில் கடந்த மே மாதம் துவங்கிய கலவரம் இன்னமும் ஓயாமல் அங்கொன்றும், இங்கொன்றுமாக தொடர்கிறது. அங்குள்ள உக்ருல் மாவட்டத்தில் உள்ள குகி தோவாய் என்கிற கிராமத்தில் நேற்று மீண்டும் வன்முறை வெடித்தது. அங்கு துப்பாக்கியால் சுட்டு 3 வாலிபர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். லிட்டன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தில் இருந்து நேற்று அதிகாலையில் கடுமையான துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, குகி தோவாய் கிராமம் மற்றும் வனப்பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு 24 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட 3 வாலிபர்களின் உடல்களை போலீஸ் அதிகாரிகள் கண்டெடுத்தனர். மேலும், 3 பேரின் உடல்களிலும் துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறினர். மணிப்பூர் மாநிலத்தில் ஏற்கனவே இரு சமூகத்திற்கு இடையே ஏற்பட்ட வன்முறையால் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், நேற்று நடந்த துப்பாக்கிச் சூடு சண்டையால் மேலும் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும்என்று முதல்வர் பிரேன்சிங் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் நேற்று கூறுகையில்,’மணிப்பூரில் அமைதி மற்றும் இயல்புநிலையை மீட்டெடுப்பது மிக முக்கியமானது. எனவே மணிப்பூர் பிரச்னையில் அனைவரும் கருத்துகளை வெளியிடுவதைத் தவிர்த்து, மற்றொரு சமூகத்திற்கு வருத்தமளிக்கும் விவாதத்தில் ஈடுபட வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கும். ஆனால் மக்கள் தங்கள் சுய நலன்களை ஒதுக்கி வைத்துவிட்டு பொது நலன்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இப்போது அமைதியை மீட்டெடுப்பதே முக்கிய நோக்கம். மேலும் இனிமேல் மக்கள் இரட்டிப்பாக உழைக்க வேண்டும். இதனால் மணிப்பூர் மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பும்’ என்றார்.

*சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிகளுடன் பேரணி
மணிப்பூர் சுராசந்த்பூரில் நடந்த சுதந்திர தின அணிவகுப்பில் ஒரு குழுவினர் அதி நவீன துப்பாக்கிகளுடன் பேரணி நடத்திய சம்பவம் இப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சுராசந்த்பூர் துணை ஆணையர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் மணிப்பூர் அரசு அறிக்கை கேட்டுள்ளது. மணிப்பூர் மாநில பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் கூறுகையில், ‘சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிகளை காண்பித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’என்றார்.

The post மணிப்பூரில் மீண்டும் வன்முறை 3 வாலிபர்கள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Related Stories: