மக்களவை தேர்தல் வெற்றியே இந்தியா கூட்டணியின் உடனடி பணி: ப.சிதம்பரம் கருத்து

கொல்கத்தா: ‘இந்தியா கூட்டணி உடனடியாக செய்ய வேண்டிய பணி, மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதே’ என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறி உள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: சட்டீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரசின் தோல்வி எதிர்பாராதது. இந்த முடிவுகள் கவலை அளிக்கின்றன. இருப்பினும், கட்சியின் பலவீனங்களை தலைமை நிவர்த்தி செய்யும் என நம்புகிறேன். அதே சமயம், ராஜஸ்தான், ம.பி, சட்டீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகிய 4 பெரிய மாநிலங்களில் கட்சியின் 40 சதவீத வாக்குகள் அப்படியே உள்ளன. தற்போது பாஜவின் கப்பலில் காற்று வீசுகிறது.

ஆனால் காற்று திசையை மாற்றும். அவர்கள் எந்த தேர்தலையும் இறுதிகட்ட போராக நினைத்து போராடுகின்றனர். அவர்களின் போராட்ட குணத்தை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணியின் தலைவர்கள் குறைந்தபட்சம் 400-425 இடங்களில் பாஜவை வெல்லக்கூடிய வேட்பாளர்களை அடையாளம் காண வேண்டும். இப்போதைய சூழலில் இந்தியா கூட்டணியின் முன் உள்ள உடனடியான பணியானது, மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமே. அதன்பின் பிரதமர் வேட்பாளரை மக்களே அடையாளம் காட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post மக்களவை தேர்தல் வெற்றியே இந்தியா கூட்டணியின் உடனடி பணி: ப.சிதம்பரம் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: