டிரம்பின் 25% கூடுதல் வரி + அபராதம் இன்று அமலாகிறது இந்திய தொழில்துறைக்கு ஆபத்தா? எந்த துறைகள் பாதிக்கும் எவை தப்பிக்கும்

புதுடெல்லி: உலகிலேயே அதிகமான வரி விதிக்கும் நாடாக இருப்பதால் இந்தியாவுக்கு 25 சதவீத வரியும், ரஷ்யாவிடம் அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்குவதால் அபராதமும் விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அவரது இந்த கூடுதல் வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இது இந்திய தொழில்துறைக்கு எவ்வளவு ஆபத்தாக அமையும்? எந்தெந்த துறைகளை பாதிக்கும்? பொருளாதாரத்தில் எப்படிப்பட்ட தாக்கத்தை உண்டாக்கும் என்பதை பொருளாதார ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.

தற்போதைய நிலையில், எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படும் என்ற விவரங்களை அமெரிக்கா வெளியிடவில்லை. அதனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்ட வரி உயர்வு அடிப்படையிலேயே பாதிப்புகள் கணிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ரத்தினங்கள் மற்றும் நகைகள், ஜவுளி ஆகிய இரு துறைகள் கடுமையான பாதிப்பை சந்திக்கும் வாய்ப்புகள் நிறைய உள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ரத்தினங்கள் மற்றும் தங்க நகைகளுக்கு இதுவரை 5 முதல் 13.5 சதவீதம் வரை வரி இருந்த நிலையில் இனி 30 முதல் 38.5 சதவீதமாக அதிகரிக்கிறது. இது இறக்குமதி செலவை அதிகரித்து இந்திய வர்த்தகர்களின் லாபத்தில் பெருமளவு கை வைக்கக்கூடியது.

இந்தியா அமெரிக்காவிற்கு 11.88 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கம், வெள்ளி மற்றும் வைரங்களை ஏற்றுமதி செய்கிறது. இதில் வைரத்தை மட்டுமே 4.35 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்த துறையில் ஏற்றுமதி குறைந்தால், அது சிறு கைவினைஞர்கள் மற்றும் வணிகர்களை பாதிக்கும். இத்துறையில் பெரும்பாலானவை, குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து நடைபெறுகின்றன. இதே போல இந்தியாவில் இருந்து ஜவுளிகள் அதிகளவில் அமெரிக்காவுக்கு தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதுவரை இத்துறைக்கு 6 முதல் 9 சதவீத வரிகள் மட்டுமே இருக்கும் நிலையில் இனி 31 முதல் 34 சதவீதமாக வரிகள் அதிகரிக்கும். இது இத்துறையை கடுமையாக பாதிக்கும்.

குறிப்பாக, தமிழ்நாட்டின் திருப்பூர், குஜராத்தின் சூரத் போன்ற நகரங்கள் ஜவுளி உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. இங்கு ஜவுளித் துறையை நம்பி பல லட்சம் குடும்பம் வாழ்கின்றன. குறிப்பாக பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பை தரும் துறையாக ஜவுளித்துறை இருக்கிறது. எனவே இத்துறையில் பாதிப்பு என்பது வேலைவாய்ப்பிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜவுளித்துறையில் இந்தியாவின் முக்கிய சர்வதேச போட்டியாளர்களாக வங்கதேசமும், வியட்நாமும் திகழ்கின்றன. இதில் வங்கதேசத்திற்கு 35 சதவீத வரியையும், வியட்நாமுக்கு 20 சதவீத வரியையும் அமெரிக்கா விதித்துள்ளது.

இதனால் இந்திய ஜவுளிகளுக்கு பதிலாக வியட்நாம் மீது அமெரிக்க நிறுவனங்கள் கவனம் செலுத்தும் வாய்ப்புகள் அதிகமுள்ளன. இதனால் இந்திய ஜவுளித்துறை மாற்று சந்தையை தேட வேண்டிய கட்டத்திற்கு தள்ளப்படும். தற்போது தொலை தொடர்பு மற்றும் மின்னணு பொருட்களுக்கு எந்த வரியும் கிடையாது. இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் எந்த கட்டணமும் இன்றி அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்கும் 25 சதவீத வரி விதிக்கப்படும் பட்சத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படும் செல்போன்களில் விலை அமெரிக்காவில் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

கொரோனாவுக்குப் பிறகு வர்த்தக போரால் சீனாவுக்கு பதிலாக இந்தியாவை முக்கிய உற்பத்தி தளமாக ஆப்பிள் நிறுவனம் மாற்றி உள்ளது. அதிலும் தமிழ்நாட்டில் உள்ள அதன் உற்பத்தி மையத்தில் இருந்து தான் அதிகளவில் ஐபோன்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் ஐபோன்கள் தான் அமெரிக்காவில் பெருமளவில் விற்கப்படுகின்றன. இதுதவிர, ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் வெற்றிகரமாக செயல்படுவதை காட்டித்தான் எலக்ட்ரிக் வாகன நிறுவனமான டெஸ்லா மற்றும் செமிகண்டக்டர் நிறுவனமான மைக்ரான் போன்ற நிறுவனங்கள் இந்திய சந்தையில் நுழைவதை ஒன்றிய அரசு ஊக்குவித்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில் ஆப்பிள் நிறுவனத்திற்கு 25 சதவீத வரிவிதிக்கப்படும் நிலையில் அது ஒட்டுமொத்த முதலீடு ஊக்குவிப்பு முயற்சிகளின் எதிர்காலத்தை மழுங்கடிக்கச் செய்யும். ஆனாலும், தற்போது வரையிலும் தேசிய பாதுகாப்புக்கு முக்கியமானதாகக் கருதப்படும் துறைகளான செமிகண்டக்டர் போன்ற துறைகளுக்கு வர்த்தக விரிவாக்கச் சட்டத்தின் பிரிவு 232 இன் கீழ் அமெரிக்க வணிகத் துறை வரி விலக்கு அளித்து வருகிறது. இந்த வரி விலக்கை அதிபர் டிரம்ப் மாற்றாத வரையிலும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு உள்ளிட்ட மின்னணு பொருட்கள் துறைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

இதே போல, ஆட்டோ மொபைல் துறைக்கும் 25 சதவீத வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் அத்துறையும் தப்பித்துள்ளது. ஓராண்டுக்கு சுமார் 7 பில்லியன் டாலர் மதிப்பிலான வாகன உதிரிபாகங்கள் அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் ஆட்டோமொபைல் 35% பங்களிப்பை கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி, இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி தொழில்துறையான மருந்துத் துறைக்கு (13 பில்லியன் டாலர்) இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதும் ஆறுதலான விஷயமாகும்.

ஆனாலும், டிரம்ப் அறிவித்திருப்பது வெறும் 25 சதவீதம் வரி மட்டுமல்ல. அதனுடன் அபராதமும் (எவ்வளவு என அறிவிக்கப்படவில்லை) உள்ளது. அடிப்படை வரியாக 10 சதவீதமும் உள்ளது. அலுமினியம், எஃகு பொருட்களுக்கு 50 சதவீத அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சேர்ந்தால் நிச்சயம் அது இந்திய பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் கூறி உள்ளனர். எனவே, நடப்பண்டில் கணிக்கப்பட்ட இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு 6 சதவீத்தில் இருந்து கடுமையான வீழ்ச்சியை சந்திக்கும் அபாயங்களும் உள்ளன. எனவே, டிரம்பின் 25 சதவீத கூடுதல் வரி முழு பொருளாதார சுழற்சியை பாதிப்பது நிச்சயம்.

* 7 பில்லியன் டாலர் இழப்பு
டிரம்பின் கூடுதல் வரி விதிப்பால் இந்தியா ஆண்டுதோறும் 7 பில்லியன் டாலர் (ரூ.60,200 கோடி) இழப்பை சந்திக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்னர்.

* முக்கிய துறைகள்
ஜவுளி, விவசாயம், தோல் மற்றும் ரத்தினம், தங்க நகைகள் ஆகிய துறைகள் அமெரிக்காவுக்கான மொத்த ஏற்றுமதியில் 35% பங்களிப்பை கொண்டுள்ளன. இதன் மதிப்பு 30 பில்லியன் டாலர் (ரூ.2.58 லட்சம் கோடி). இத்துறைகள் தான் அதிகமான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் துறைகளாக உள்ளன.

* எவ்வளவு சராசரி வரி?
அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவின் சராசரி வரி விகிதம் 17.
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கும் சராசரி வரி விகிதம் 3.3.

வரிக்கு முன், வரிக்கு பின்
துறைகள் முன்பு இனி
தொலைதொடர்பு 0% 25%
ரத்தினம் மற்றும்
தங்க நகைகள் 5-13.5% 30-38.5%
உணவு மற்றும் வேளாண் பொருட்கள் 14-15% 29-30%
ஜவுளி, ஆடைகள் 6-9% 31-34%

2024ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி
* மருந்து தயாரிப்பு பார்முலாக்கள் மற்றும் உயிரியல் பொருட்கள் (ரூ.69 ஆயிரம் கோடி)
* தொலைத்தொடர்பு கருவிகள் (ரூ.55 ஆயிரம் கோடி)
* விலைமதிப்பற்ற கற்கள் (ரூ.45 ஆயிரம் கோடி)
* பெட்ரோலியப் பொருட்கள் (ரூ.35 ஆயிரம் கோடி)
* தங்கம் மற்றும் பிற உலோக நகைகள் (ரூ.27ஆயிரம் கோடி)
* பருத்தி, ஆயத்த ஆடைகள்(ரூ.23 ஆயிரம் கோடி)
* இரும்பு மற்றும் எஃகு பொருட்கள் (ரூ.23 ஆயிரம் கோடி)

முக்கிய இறக்குமதி
* கச்சா எண்ணெய் (ரூ.38 ஆயிரம் கோடி)
* பெட்ரோலிய பொருட்கள் (ரூ.30 ஆயிரம் கோடி)
* நிலக்கரி (ரூ.29 ஆயிரம் கோடி)
* வெட்டி மெருகூட்டப்பட்ட வைரங்கள் (ரூ.22 ஆயிரம் ேகாடி)
* மின்சார இயந்திரங்கள் (ரூ.12 ஆயிரம் கோடி)
* விமானம், விண்கலம் மற்றும் பாகங்கள் (ரூ.11 ஆயிரம் கோடி)
* தங்கம் (ரூ.11 ஆயிரம் கோடி )

* பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும்
ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவில் கடந்த 3 ஆண்டாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்படவில்லை. உலகிலேயே அதிகளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் 3வது நாடு இந்தியா. உள்நாட்டு தேவையில் 85 சதவீத கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. உக்ரைன் போருக்கு முன் ரஷ்யாவிடம் இருந்து 5.2 பில்லியன் டாலர் அளவுக்கு மட்டுமே கச்சா எண்ணெய் வாங்கப்பட்ட நிலையில் தற்போது 56 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. தற்போது டிரம்பின் கோபத்திற்கு பயந்து மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து இந்தியா மீண்டும் கச்சா எண்ணெயை அதிகளவில் வாங்கினால் அது பெட்ரோல், டீசல் விலையை அதிகரிக்க வழிவகுக்கும். இதனால் விலைவாசி அதிகரித்து பணவீக்கத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

* இருதரப்பு வர்த்தகம்
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக அமெரிக்கா இருந்து வருகிறது. இந்தியாவின் மொத்த பொருட்கள் ஏற்றுமதியில் 18 சதவீதமும், இறக்குமதியில் 6.22 சதவீதமும், இருதரப்பு வர்த்தகத்தில் 10.73 சதவீதமும் அமெரிக்காவின் பங்கு வகிக்கிறது.

* 2023-24ஆம் ஆண்டில் ரூ.7.46 லட்சம் கோடி பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்த இந்தியா, அங்கிருந்து ரூ.3.57 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்தது.
* 2022-23ல் ரூ.7.58 லட்சம் கோடி பொருட்கள் ஏற்றுமதி. ரூ.4.31 லட்சம் கோடிக்கு இறக்குமதி

* இந்திய விவசாயிகள் கதி?
அமெரிக்காவுடன் இடைக்கால ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொள்ளத் தவறியதே 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படுவதற்கு காரணம். இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாமல் போனதற்குக் காரணம், விவசாயம் மற்றும் பால் பொருட்களுக்கு இந்தியா தனது கதவுகளைத் திறக்க மறுத்ததே என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்கள் மற்றும் பால் பொருட்களை இந்தியா தனது சந்தையில் விற்பனை செய்ய டிரம்ப் விரும்புகிறார். இந்தியாவில் அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு சராசரியாக 37.7% வரி விதிக்கப்படுகிறது, அதே நேரத்தில் அமெரிக்காவில் இந்திய விவசாயப் பொருட்களுக்கு இந்த விகிதம் 5.3% ஆக உள்ளது.

டிரம்பின் சமீபத்திய அறிவிப்புக்குப் பிறகு, இந்தியாவில் இருந்து வரும் பொருட்களுக்கான இந்த வரி, 25% ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்க விவசாய பொருட்களை அனுமதிப்பதன் மூலம் இந்திய விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு முடிவு எடுக்க முடியாமல் உள்ளது. தற்போது டிரம்பின் வரி மிரட்டலுக்கு பயந்து இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு விட்டுத்தரும் பட்சத்தில் அமெரிக்க வேளாண் பொருட்களும் இந்திய சந்தையில் தடம் பதித்து நமது விவசாயிகளின் வாழ்க்கையை மேலும் நாசமாக்கக் கூடும்.

The post டிரம்பின் 25% கூடுதல் வரி + அபராதம் இன்று அமலாகிறது இந்திய தொழில்துறைக்கு ஆபத்தா? எந்த துறைகள் பாதிக்கும் எவை தப்பிக்கும் appeared first on Dinakaran.

Related Stories: