ஆளுநர்களின் அத்துமீறல்களுக்கு எதிரான முதல்வர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரவு

சென்னை: ஆளுநர்களின் அத்துமீறல்களுக்கு எதிரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆதரவு தெரிவித்துள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயனை தொடர்ந்து மேற்குவங்க முதல்வர் மம்தாவும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியது போல, எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் ஆளுநர்களுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை தேவை என்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பாக கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் ஜனநாயகத்துக்கு எதிரான ஆளுநர்கள் செயல்பாடு தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கைக்கு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார்.

தொலைபேசியில் தொடர்பு கொண்டு மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்ததாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர் கூட்டத்தை கூட்டுமாறும் மம்தா பானர்ஜி யோசனை தெரிவித்ததாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

The post ஆளுநர்களின் அத்துமீறல்களுக்கு எதிரான முதல்வர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரவு appeared first on Dinakaran.

Related Stories: