ஒரு வருட பயிற்சியின் போது பெண் காவலர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்? போலீஸ் அதிகாரிகள் விசாரணை

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 2022ல் 131 பெண் காவலர்கள் உள்பட மொத்தம் 383 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு கோரிமேடு காவலர் பயிற்சி மைதானத்தில் கடந்த ஓராண்டுகளாக பலவித பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்த பயிற்சி நிறைவடைந்த நிலையில் அவர்களுக்கான பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே பயிற்சியின்போது பெண் காவலர்களை பயிற்சி கொடுத்த சிலர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு பெயர் இல்லாமல் அனுப்பப்பட்டுள்ள புகார் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: புதுவையில் ஆண் காவலர்களுக்கு பயிற்சி கொடுக்க பணியமர்த்தப்பட்ட 2 உதவி எஸ்ஐக்கள், பெண் காவலர்களை அணி வகுப்பின்போது தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி உயரதிகாரிக்கு தெரிவித்தும் நடவடிக்கை இல்லாத நிலையில், குற்றம் சாட்டப்பட்டவரும், விசாரிக்கும் நபரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் இப்புகார் விசாரிக்கப்படவில்லை. பயிற்சி காலத்தில் செல்போன் பயன்படுத்த தடை உள்ள நிலையில், 2 உதவி எஸ்ஐக்களும் அவர்களுக்கு வேண்டிய நபர்களுக்கு செல்போனை வழங்கியதாக இப்புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி காவலர் பயிற்சி பள்ளி வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘பயிற்சி முடித்து சென்ற சிலர், அதிகாரிகளை பழிவாங்கும் நோக்கில் ெமாட்டை கடிதம் எழுதியுள்ளனர். பயிற்சிகள் நிறைவு பெறுவதற்கு முன்பாகவே பெண் காவலர்களிடம் இவ்விவகாரம் தொடர்பாக தனித்தனியாக விசாரிக்கப்பட்டது. அப்போது யாரும் நேரடியாக புகார் கூறவில்லை. இருந்தும் அதிகாரிகளை கொண்டு தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இதில் தவறு நடந்திருப்பது தெரியவந்தால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றனர்.

The post ஒரு வருட பயிற்சியின் போது பெண் காவலர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்? போலீஸ் அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: