அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமனின் தாயார் கல்பகம் ராமன் மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
மறைந்த வி.பி.ராமன் அவர்களின் மனைவியும், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமனின் தாயாருமான கல்பகம் ராமன் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினேன். அன்னையை இழந்து வாடும் பி.எஸ்.ராமன், அவரது சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறைந்த வி.பி.ராமன் திராவிட இயக்கத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவர். திமுகவின் சட்டதிட்டங்களை வகுப்பதில் பெரும் பங்காற்றியவர். சட்டத்துறையில் அனைவரும் வியந்து பார்க்கக்கூடிய மிகச்சிறந்த வல்லுநராக விளங்கினார். அப்படிப்பட்டவருக்கு நமது அரசு பொறுப்பேற்றவுடன், அவரது இல்லம் அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரைச் சூட்டினோம். அந்த நிகழ்ச்சியில் கூட கல்பகம் ராமன் அவர்கள் எனக்கு ஒரு நினைவுப் பரிசை வழங்கி நீண்டநேரம் உரையாடிக் கொண்டிருந்தது இப்போதும் என் நெஞ்சில் நிழலாடுகிறது.

வி.பி.ராமனும், தற்போது பி.எஸ்.ராமனும் சட்டத்துறையில் சிறந்து விளங்க உறுதுணையாக இருந்தவர் மறைந்த கல்பகம் ராமன் என்றால் மிகையாகாது. அவரது மறைவால் வாடும் பி.எஸ்.ராமன், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: