டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளை கால தாமதமின்றி உடனடியாக வெளியிட நடவடிக்கை: புதிய தலைவராக பொறுப்பேற்ற எஸ்.கே.பிரபாகர் உறுதி

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை குறிப்பிட்ட கால அட்டவணைப்படி நடத்தவும், தேர்வு முடிவுகளை கால தாமதமின்றி உடனடியாக வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார்.சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் அதன் 27வது புதிய தலைவராக எஸ்.கே.பிரபாகர் நேற்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

அவருக்கு டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபாலசுந்தர ராஜ், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் மற்றும் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள், பணியாளர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். புதிய தலைவராக பதவியேற்று கொண்ட எஸ்.கே.பிரபாகர் 2028ம் ஆண்டு வரை அந்த பதவியில் இருப்பார்.பதவியேற்ற பின்னர் டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் அளித்த பேட்டி: டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நேர்மையாக நடத்த தலைவர் என்ற முறையில் உறுதியளிக்கிறேன்.

இந்த தேர்வுகளின் முடிவுகளும் உடனடியாக வெளியிட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இந்த தேர்வுகளைத் தாண்டி மற்ற போட்டி தேர்வுகளையும் மாணவர்கள் எழுதுகிறார்கள். இரு தேர்வு தேதிகளும் ஒரே நாளில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளப்படும். அதேபோல், தேர்வு எழுதிய பின் முடிவுகள் விரைவில் வந்தால்தான் எந்த பணியில் சேருவது என முடிவு எடுக்க முடியும். இருக்கும் நடைமுறை சிக்கல்களை பார்த்து மற்ற தேர்வுகளை எப்படி நடத்துகிறார்கள் என்பதையும் கவனித்து அதைப் பின்பற்றவும் முயற்சி எடுத்து வருகிறோம்.

தேர்வுக்கும், தேர்வு முடிவுகளுக்கும் இருக்கும் இடைவெளி நிச்சயம் குறைக்கப்படும். காலதாமதத்தை குறைப்பது தான் எங்களது முதல் பணி. ஒவ்வொரு தேர்வுக்கும் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாட்களில் தேர்வு எழுதும் நடைமுறை கொண்டு வரப்படும். தேர்வுகள் குறிப்பிட்ட கால அட்டவணைகளில் நடப்பதற்கும், விரைவில் தேர்வு முடிவுகள் வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பெரிய புகார்கள் இல்லாமல் தரமான முறையில் அரசு தேர்வுகளை நடத்தி வருகிறது. இதை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளை கால தாமதமின்றி உடனடியாக வெளியிட நடவடிக்கை: புதிய தலைவராக பொறுப்பேற்ற எஸ்.கே.பிரபாகர் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: