தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழக அரசு சார்பில் நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்களுக்கான) சட்ட மசோதா-2023 கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மசோதா, விவசாய நில உரிமையாளர்கள், ஏழை விவசாய குத்தகைதாரர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து முன் ஒப்புதல் பெறாமல் தொழிற்சாலை அமைத்தல் உள்ளிட்ட சிறப்பு திட்டங்களுக்கு நிலங்களை ஒருங்கிணைக்க அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்தச் சட்டம் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. காவிரி டெல்டா உள்ளிட்ட விவசாயிகளின் உரிமைகள், வாழ்வாதாரம் மற்றும் உணவு பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலும், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் உள்ளது. எனவே, இந்த சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரியகிளாட் ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், `இந்த மசோதா அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என எவ்வாறு கூறுகிறீர்கள்?’ என கேள்வி எழுப்பினர். மேலும், நீதிபதிகள் கூறுகையில், `இது அரசின் கொள்கை முடிவுடன் தொடர்புடையது. எந்த அடிப்படையில் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என குறிப்பிடாமல் நிவாரணம் வழங்க இயலாது. பாதிக்கப்படுபவர்கள் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரலாம்’ என குறிப்பிட்டு, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
The post தமிழக அரசின் நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதாவை எதிர்த்த மனு தள்ளுபடி: ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி appeared first on Dinakaran.
