தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இது போன்ற பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டாம்: முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் காட்டம்

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளிமாநில பயிற்சியாளர்களை தயவு செய்து நியமிக்க வேண்டாம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு அணி, மும்பை அணியுடனான போட்டியில் தோல்வியடைந்தது.

இந்த தோல்வி குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் சுலக்ஷன் குல்கர்னியின் விமர்சனம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 4ம் தேதி மும்பையில் நடைபெற்ற ரஞ்சி கோப்பையில் 2வது அரையிறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி மும்பைக்கு எதிராக இன்னிங்ஸ் தோல்வி அடைந்ததையடுத்து தமிழ்நாடு அணியின் பயிற்சியாளர் “தமிழ்நாடு அணி ரஞ்சி கோப்பையில் தோல்வி அடைந்ததற்கு கேப்டன் சாய் கிஷோர் எடுத்த தவறான முடிவு காரணம்.

அவரின் தவறான முடிவு தமிழ்நாடு அணியின் ரஞ்சி கோப்பை தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. நாங்கள் முதல் நாளில் 9 மணிக்கே போட்டியை இழந்துவிட்டோம், மும்பை அணியை பற்றி எனக்கு நன்கு தெரியும்” என தெரிவித்தார்.

இவரின் கருத்துக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “இது நியாயமானது அல்ல. அன்புள்ள TNCA, தயவு செய்து இதுபோன்ற பயிற்சியாளர்களை வெளியில் இருந்து (மாநிலத்தில்) நியமிக்க வேண்டாம்” என தெரிவித்தார். மேலும் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளதாவது;

“நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பம் என்று நினைத்து, 7 ஆண்டுகளுக்குப் பிறகு அணியை அரையிறுதிக்குக் கொண்டு வந்த கேப்டனை ஆதரிப்பதற்குப் பதிலாக, பயிற்சியாளர் இப்படி கூறியிருப்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது” என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இது போன்ற பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டாம்: முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: