திருப்பதி, சித்தூர் மாவட்டங்களில் குழந்தை தொழிலாளர் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

*கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருப்பதி : திருப்பதி, சித்தூர் மாவட்டங்களில் குழந்தை தொழிலாளர் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் மற்றும் டிஎஸ்பி தொடங்கி வைத்தனர்.உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, திருப்பதி நகரில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது. வெங்கடேஸ்வரா பள்ளியில் தொடங்கி காந்தி சாலை ஜங்ஷன் வரை நடந்த பேரணியை மாவட்ட இணை கலெக்டர் பாலாஜி, டிஎஸ்பி காட்டம ராஜூ ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

அப்போது, இணை கலெக்டர் பாலாஜி பேசுகையில், இன்றைய குழந்தைகளே நாளைய குடிமக்கள். இளம் வயதிலேயே பள்ளிக்கு செல்லாமல் பணிக்கு செல்வதால் குழந்தைகள் மனவளர்ச்சி அடையாமல், உடல் நலம் பாதிக்கப்பட்டு வளர முடியாமல் போகும். மேலும், சமூகத்தில் தங்கள் பங்களிப்பை இழக்க நேரிடும். குழந்தை தொழிலாளர் முறை சட்டப்படி குற்றம். அதனால்தான் இந்த சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்தக்கூடாது. குழந்தைகளுக்கு நல்ல கல்வி மற்றும் தங்குமிட வசதிகளை அரசு வழங்கியுள்ளது. இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

பேரணியில் தொழிலாளர் துணை ஆணையர் பாலு நாயக், தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணா ரெட்டி, ஐசிடிஎஸ் அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.சித்தூர்: சித்தூர் காந்தி சிலை அருகே உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி, கலெக்டர் மோகன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் தேதி உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. குழந்தை தொழிலாளர்களை பணியில் வைத்து கொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு குழந்தைகளை படிக்கும் வயதில் வேலைக்கு அனுப்புகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சித்தூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர். சித்தூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் ஏராளமான குழந்தை தொழிலாளர்கள் பணி புரிந்து வருவதாக புகார்கள் வருகின்றன. எனவே, அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டு குழந்தை தொழிலாளர்களை மீட்க வேண்டும்.

14 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் யாராவது பணியில் இருப்பது தெரிந்தால் பணிபுரியும் நிறுவனத்தின் மீதும், உரிமையாளர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.முன்னதாக, காந்தி சிலை அருகே குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து சித்தூர் காந்தி சிலை அருகே தொடங்கிய பேரணி ஐரோடு, எம்ஜிஆர் சாலை, எம்எஸ்ஆர் சர்க்கிள், தர்கா சர்க்கிள், சர்ச் தெரு, பஜார் தெரு, காந்தி சாலை வழியாக காந்தி சிலை அருகே நிறைவு பெற்றது.
இதில் மாவட்ட லோக் அதலாத் நீதிபதி கருணாகுமார், தொழிலாளர் துறை அதிகாரி ஓம்கார்ராவ், இணை அதிகாரி ஜெகதீஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் நாகசவுஜன்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருப்பதி, சித்தூர் மாவட்டங்களில் குழந்தை தொழிலாளர் தடுப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: