திருவில்லிபுத்தூரில் தூள் பறக்கும் தீபாவளி சேல்ஸ்; தித்திக்கும் பால்கோவாவுக்கு ‘செம டிமாண்ட்’

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் தீபாவளி பண்டிகையையொட்டி பால்கோவா உள்ளிட்ட சுவீட் வகைகள் விற்பனையாகி வருகின்றன. குறிப்பாக பால்கோவாவிற்கு செம டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. இதனால், முக்கிய கடைகளில் பொதுமக்கள் ஆர்டர் கொடுத்து வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயிலாகும். அதன்பின் நமக்கு நினைவுக்கு வருவது சுவை மிகுந்த பால்கோவா இனிப்பு வகையாகும். தீபாவளி மற்றும் ஐயப்பன் கோயில் சீசன், ஆடிப்பூர தேரோட்ட தினங்களில் திருவில்லிபுத்தூரில் பால்கோவா விற்பனை களைகட்டும். இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், திருவில்லிபுத்தூரில் சுவை மிகுந்த பால்கோவா மற்றும் பால் சுவீட்டுகளுக்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிறுவனங்கள் தயாரிக்கும் பால்கோவா மற்றும் பால் ஸ்வீட்டுகள் வேகமாக விற்றுத் தீர்கின்றன. இதனால், இனிப்பு பிரியர்கள், வாடிக்கையாளர்கள் பால்கோவாவுக்கு ஆர்டர் கொடுத்து காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர்.

தீபாவளி என்றாலே பட்டாசுகள், சுவை மிகுந்த இனிப்பு வகைகளை வாங்கி வைத்து கொண்டாடுவர். இந்தாண்டு தீபாவளிக்கு திருவில்லிபுத்தூரில் பால்கோவா மற்றும் இனிப்பு வகைகள் விற்பனை களைகட்டியது. பொதுமக்கள் தங்களுக்கு மட்டுமல்லாமல், தங்களது உறவினர்களுக்கும் வாங்கி பார்சல் அனுப்புகின்றனர். குறிப்பிட்ட நிறுவனங்கள் தயாரிக்கும் பால் அல்வா, கேரட் பால்கோவா, பால் கேட் மற்றும் பால் சுவீட்ஸ்களுக்கு செம டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து திருவில்லிபுத்தூரில் ஸ்வீட் கடை உரிமையாளரான பாம்பே ரவி என்பவர் கூறுகையில், ‘ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பால்கோவா விற்பனை அதிகமாக இருக்கும். பால் சுவீட்ஸ்கள் விற்பனையும் அதிகமாக இருக்கும். இந்தாண்டு அதிக அளவு இனிப்பு வகைகளை வாங்கி செல்வதால் பால்கோவா உள்ளிட்ட இனிப்புகளுக்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.

30 வகையான இனிப்பு வகைகள் தயாரிக்கப்படுகின்றன. இன்னும் தீபாவளிக்கு இரண்டு நாட்கள் உள்ள நிலையில், தேவை அதிகமாக இருப்பதால், அதிக தொழிலாளர்களை கொண்டும், நவீன இயந்திரங்களைக் கொண்டும் இனிப்பு வகைகளை தயாரித்து வருகிறோம். இந்தாண்டு பால்கோவா கிப்ட் பாக்ஸும் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post திருவில்லிபுத்தூரில் தூள் பறக்கும் தீபாவளி சேல்ஸ்; தித்திக்கும் பால்கோவாவுக்கு ‘செம டிமாண்ட்’ appeared first on Dinakaran.

Related Stories: