தேனிக்காரருக்கு போட்டியாக பிரமாண்ட மாநாடு நடத்த சேலம்காரர் முடிவு செய்துள்ளதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தேனிக்காரரை பிரமாண்ட மாநாடு மூலம் திருப்பியடிக்க சேலம்காரர் திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறாராமே, உண்மையா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மலைக்கோட்டையில் உள்ள மாவட்டத்தில் கட்சி மாநாடு ஒன்றை நடத்த தேனிக்காரர் திட்டமிட்டுள்ளார். கோடிகளை இறைத்து டெல்லியின் ஆசிர்வாதம் வாங்கவே இந்த மாநாடு என்று குறை சொல்கிறது சேலம் தலைமையின் கீழ் உள்ள ஆதரவு மாஜி அமைச்சர்கள். அதை அப்படியே உறுதி செய்வதுபோல, தேனிக்காரரின் ஆதரவாளர்கள் தீவிரமாக மாநாடு ஏற்பாடுகளில் இறங்கி இருக்காங்களாம். இந்த மாநாட்டில் அதிக அளவில் கூட்டத்தை காட்ட வேண்டும்… நம்ம கூட்டத்தை பார்த்து எப்படியாவது தேர்தல் கமிஷனில் விஐபிக்களின் செல்வாக்கை பயன்படுத்தி இலை சின்னத்தை வாங்குவதுதான் நோக்கமாம். காரணம், டெல்லிவாலாக்களை பொறுத்தவரை சேலம்காரருக்கு நிர்வாக சப்போர்ட், தொண்டர்கள் சப்போர்ட் இருப்பதாகவே டெல்லிக்காரங்க நினைக்கிறாங்க… அவங்க நினைப்பை உடைத்து நாம யாரு என்று காட்ட வேண்டும் என்று நினைக்கிறாராம் தேனிக்காரர். அதற்காகவே, புதுசாக தேனிக்காரர் வியூகம் வகுத்துள்ளாராம். அதையும் மூவர் குழுவை முடிவு செய்து ரகசியமாக வைத்துள்ளதாம். அந்த தகவல் கிடைத்த சேலம் தரப்பு டென்ஷனில் இருக்கிறதாம். நம்மை விட அந்த மாநாட்டில் அதிகம் யாாரும் வரக்கூடாது. நம்ம ஆட்கள் பணம், பானத்துக்கு ஆசைப்பட்டு போயிடப்போறாங்க. அவங்களை தடுத்து நிறுத்துங்க என்று சேலத்துக்காரர் கூறினாராம்…

தேனிக்காரர் நடத்தும் மாநாடு சேலத்துக்காரர் அணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, இந்த மாநாட்டிற்கு டெல்டா மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் ஒருவரும் வராமல் தடுக்க வேண்டும். அவர்கள் பணத்தை இறைத்து ஆட்களை அழைத்து வந்தால் பிரச்னை இல்லை. நம்ம ஆதரவு ஆட்கள் யாரும் போய்விடக் கூடாது என்பதில் சேலம்காரர் உறுதியாக இருக்கிறாராம். மாவட்ட செயலாளர்கள் முதல் கிளை செயலாளர்கள் வரை கடுமையாக எச்சரித்துள்ளாராம். இதற்காக சேலத்துக்காரர் ஆதரவாளர்கள் திரைமறைவு வேலையில் இறங்கியுள்ளார்களாம். தேனிக்காரரின் மாநாட்டுக்கு போட்டியாக டெல்டாவில் மிகப்பெரிய அளவில் மாநாடு நடத்த சேலத்துக்காரர் திட்டமிட்டுள்ளாராம். விரைவில், மாநாடு எந்த தேதியில் நடக்கும் என்று அறிவிப்பு வெளியாக உள்ளதாம். மாநாட்டில் பெரிய அளவில் கூட்டத்தை காட்டுவதற்கான பொறுப்பு மனுநீதி சோழன் மாவட்ட மாஜி அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம். அதற்கான வேலையில் அவர் தீவிரமாக செயல்பட்டு வருகிறராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கதர் கட்சிக்குள் நடக்கும் உள்குத்து சண்டையை பற்றி சொல்லுங்க கேட்போம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘புதுச்சேரி கதர் கட்சியில், தலைவர் பதவி யாருக்கு என்பது நீண்ட நாள் இழுபறியாம். தலைவர் பதவி தனக்கு வேண்டும் என ஓபனாகவே கேட்டுவிட்டாராம், கதர் கட்சி மாஜி அமைச்சர் ‘சாமி’ பெயரை கொண்டவரின் முயற்சிக்கு சீனியர் ஒருத்தர் தடையாக இருந்து வருகிறாராம். எப்படி கோல் அடித்தாலும் சரியாக கேட்ச் பிடித்து காரியத்தை கெடுக்கிறாராம். மேலும் என்னை எதிர்த்து அரசியல் செய்கிறாயா என பதிலுக்கு ‘சாமி’யின் உறவுக்காரரை கட்சிக்குள் கொண்டுவந்து, அவருக்கு எதிராகவே அவர், போட்டியிடும் தொகுதியில் அரசியல் செய்கிறாராம் அந்த சீனியர். இதற்கிடையே முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்ததாம். அப்போது மைக் பிடித்த ‘‘சாமி’, அடுத்த முறை கூட கதர்கட்சி ஆட்சியை பிடிக்க முடியாது. நான் தலைவர் பதவி கேட்டு அகில இந்திய தலைமைக்கு அழுத்தம் கொடுத்தால், உடனே சீனியர் தலைவர் பெட்டிஷன் போடுகிறார். எனக்கு தலைவர் பதவி தேவையில்லை. அவருக்கே கொடுத்துவிடுங்கள். அப்போதாவது மாற்றம் வருகிறதா என பார்ப்போம். இப்படியே கட்சியை செயல்பட விடாமல் டம்மியாக்கி வைத்திருந்தால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் கை சின்னத்துக்கு யாரும் கை கொடுக்க மாட்டார்கள். கட்சிக்கு செலவு செய்கிறவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் வழிவிடுங்கள். கதர் கட்சி கூட்டம் போட்டால், ஆட்களை திரட்டி அழைத்து வருவதற்கு மட்டும் என்னை போன்றவர்கள் தேவை. பதவிக்கு மட்டும் ஒத்தை குருக்களா. மேலிடப்பொறுப்பாளர்களை கைக்குள் போட்டுக்கொண்டு எத்தனை நாட்கள் ஆடுவார்கள் என்று பார்ப்போம். எனக்கு கட்சி முக்கியம், இது போன்ற ஆட்கள் முக்கியமல்ல என சீனியர்களை வைத்துக்கொண்டே தெறிக்க விட்டாராம் ‘சாமி’… இவரது பேச்சை கேட்ட அரங்கில் இருந்தவர்கள் பலர் அலறினார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ விஜயமான பெண் என்ன செய்து கொண்டிருக்கிறார்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கதர்கட்சியின் இளம் தலைவர் மீதான நடவடிக்கைகளை கண்டித்து கதர் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வர்றாங்க. குமரி மாவட்டத்தில் கிழக்கு, மேற்கு, மாநகர் மாவட்டம் என்று மூன்று மாவட்டங்களாக பிரிந்து போராட்டங்கள் நடக்குதாம். எம்.எல்.ஏ.க்கள் கூட்டாகவும், தனித்தும் போராட்டத்தில் ஈடுபடறாங்க. ஆனால் குமரி மாவட்டத்தில் கதர் கட்சியின் பெண் சட்டமன்ற உறுப்பினர் இங்குள்ள கட்சியினருடன் வந்து போராட்டங்களில் பங்கேற்பது இல்லையாம். தொகுதி பக்கமும் வரவில்லை. இக்கட்டான நேரங்களில் இப்படியா அரசியல் செய்வது என்று உள்ளூர் நிர்வாகிகள் புலம்பி தீர்த்து வருகின்றனர். அதற்கு அவரே எல்லாத்தையும் நான் சட்டமன்றத்துல பார்த்துக்கிறேன் என்று கூலாக சொல்லிவிட்டு தன் வேலையை பார்க்க கிளம்புகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வெயிலூர் சிட்டியில அதிகமாக ஆக்கிரமிப்பு நடக்குதே…’’ என்றார்் பீட்டர் மாமா.

‘‘வெயிலூர்ல, காகிதத்துல தொடங்குற ஏரியாவுல மலைஅடிவாரங்களை ஆக்கிரமிச்சிருக்காங்க. ஆனா அந்த ஆக்கிரமிப்பை அகற்றவே முடியலையாம். கலெக்டர் ஆபிஸ் எதிர்க்க இருக்குற அங்கன்வாடி இடத்தை 5 வீட்டுக்காரங்க சேர்ந்து ஆக்கிரமிச்சிருக்காங்க. அதன் நிலையும் அதேதான். ஏதோ கணக்குக்கு நாங்களும் இடிச்சோம்னு ஆக்கிரமிச்சவங்களே கொஞ்சமா இடிச்சாங்களாம். சத்தான சாரி ஏரியாவுலயும், 8 வீடு கட்டி ஆக்கிரமிச்சிருந்தாங்க. இப்படி இங்க ஆக்கிரமிப்புகளுக்கு பஞ்சமில்லாம இருக்குதாம். இதனால, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அரசு பாரபட்சம் பார்க்காம எப்படி தூக்கினாங்களோ, அதேபோல வெயிலூர் சிட்டியிலயும் வீடு ஆக்கிரமிப்புகளை அகற்றணும்னு கோரிக்கை எழுந்திருக்குது…’’ என்றார் விக்கியானந்தா.

The post தேனிக்காரருக்கு போட்டியாக பிரமாண்ட மாநாடு நடத்த சேலம்காரர் முடிவு செய்துள்ளதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Related Stories: