வரி பாக்கி செலுத்தாத வணிக வளாகத்திற்கு சீல்: குடிநீர் வாரியம் நடவடிக்கை

மாதவரம்: கொளத்தூர் பகுதியில் ரூ.90 ஆயிரம் வரி செலுத்தாததால் வணிக வளாகத்திற்கு குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னையில் உள்ள வீடுகள், வணிக வளாகங்களில் குடிநீர், கழிவுநீர் வரியை வசூல் செய்ய பல்வேறு யுத்திகளை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பலமுறை நோட்டீஸ் கொடுத்தும் வரியை முறையாக செலுத்தாத நிறுவனங்களுக்கு சீல் வைக்கும் பணியில் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் ஈடுபட்டு வருகிறது.

திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட கொளத்தூர் தில்லைநகர், 200 அடி சாலை பகுதியில் தனியார் வணிக வளாகம் இயங்கி வருகிறது. 4,500 சதுர அடி கொண்ட இந்த வணிக வளாகத்தில் டைல்ஸ் கடை, பெயின்ட் கடை, மாடல் கிச்சன், பழைய கார்களை விற்பனை செய்யும் அலுவலகம் உள்ளிட்ட 5 அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த வணிக வளாகத்தில் உள்ளவர்கள் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியை செலுத்தாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்துள்ளனர். சுமார் ரூ.90 ஆயிரம் வரை குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியத்திற்கு இவர்கள் வரி செலுத்த வேண்டி இருந்தது.

பலமுறை நோட்டீஸ் வழங்கியும் வணிக வளாகம் சார்பில் வரியை செலுத்தாததால் நேற்று சிறப்பு தாசில்தார் பவானி முன்னிலையில் திருவிக நகர் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய துணை பகுதி பொறியாளர் சுரேஷ்குமார், பொறியாளர் சல்மான், முதுநிலை கணக்கு அலுவலர் பாக்கியா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் குறிப்பிட்ட வணிக வளாகத்தை பூட்டி சீல் வைத்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராஜமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உரிய பாதுகாப்பு அளித்தனர்.

The post வரி பாக்கி செலுத்தாத வணிக வளாகத்திற்கு சீல்: குடிநீர் வாரியம் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: