வன பாதுகாவலர், மாசுகட்டுப்பாடு வாரியத்தில் 57 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்


சென்னை: உதவி வனப் பாதுகாவலர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 9 பேருக்கும், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தின் உதவி பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 48 பேருக்கும் பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை வனத்துறையில் உதவி வன பாதுகாவலர், வனத்தொழில் பழகுநர், உதவியாளர், இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் போன்ற பணியிடங்களுக்கு 154 பேரும், கருணை அடிப்படையில் 164 பேர் என மொத்தம் 318 பேர் பணிநிமயனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 308 பேர் வேட்டை தடுப்பு காவலர்கள் பணியிலிருந்து வனக்காவலர்களாக பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக உதவி வனப்பாதுகாவலர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 9 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார். இவர்கள், உதவி வன பாதுகாவலர்கள், வன பாதுகாப்பு மற்றும் வன உயிரின பாதுகாப்பு, வன பாதுகாப்பு சட்ட செயலாக்கம், வன நிர்ணய பணிகள், தீ தடுப்பு பணிகள், கிராம வன குழுக்களின் செயல்பாடுகளை கண்காணித்தல், வன நிர்வாக பணிகளில் மாவட்ட வன அலுவலர், வன பாதுகாவலர், தலைமை வன பாதுகாவலர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

அதேபோன்று, தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தில் உதவி பொறியாளர் பணியிடத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தெரிவு செய்யப்பட்ட 48 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தலைமை செயலாளர் முருகானந்தம், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் செந்தில்குமார், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர்கன் விஜயந்திர சிங் மாலிக், மீதா பானர்ஜி, தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் ஆர்.கண்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post வன பாதுகாவலர், மாசுகட்டுப்பாடு வாரியத்தில் 57 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: