சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட புதிய கூடுதல் நீதிபதிகள் 3 பேர் பதவியேற்பு: பொறுப்பு தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்


சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 3 நீதிபதிகள் நேற்று பதவியேற்று கொண்டனர். சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாவட்ட நீதிபதிகள் பிரிவில் இருந்து நீதிபதி பூர்ணிமா, உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் ஜோதிராமன், மாவட்ட நீதிபதி மரிய கிளாட்டி ஆகியோரை நியமனம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது. இதை பரிசீலனை செய்த ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நீதிபதிகளுக்கான நியமன ஆணைக்கு ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து, 3 நீதிபதிகளும் நேற்று உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்றனர். அவர்களுக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய நீதிபதிகள் பதவியேற்பு நிகழ்ச்சியில் 3 நீதிபதிகளின் பணி மற்றும் அனுபவம் ஆகியவை குறித்து அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் பேசினார். இந்நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதிகள், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் ஜெ.ரவீந்திரன், ஆர்.நீலகண்டன், பி.குமரேசன் உள்ளிட்டோரும், அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, மூத்த வழக்கறிஞர்கள், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், பொருளாளர் ஜி.ராஜேஷ், மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவர் பாஸ்கர்,

பெண் வழக்கறிஞர் சங்க தலைவி லூயிசாள், லா அசோசியேசன் தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோரும் புதிய நீதிபதிகளின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர். பொறுப்பேற்ற 3 புதிய நீதிபதிகளையும் சேர்த்து உயர்நீதிமன்றத்தில் தற்போது 65 நீதிபதிகள் உள்ளனர்.

The post சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட புதிய கூடுதல் நீதிபதிகள் 3 பேர் பதவியேற்பு: பொறுப்பு தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: