தமிழ்நாடு மின்வாரியத்திற்கு நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு அதானி ஊழல் குறித்து விசாரணை: ராகுல்காந்தி அதிரடி அறிவிப்பு

புதுடெல்லி: தமிழ்நாடு மின்வாரியத்திற்கு அதானி குழுமம் தரம் குறைந்த நிலக்கரியை அதிக விலைக்கு விற்றது தொடர்பாக செய்தி வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்வாரியத்திற்கு நிலக்கரி வழங்கியதில் பாஜ ஆட்சியில் மிகப்பெரிய நிலக்கரி ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழல் மூலம் பிரதமர் மோடியின் அபிமான நண்பர் அதானி, தரம் குறைந்த நிலக்கரியை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு விற்று பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளார். இதனால் சாமானிய மக்கள் மின்கட்டணத்திற்கு மூன்று மடங்கு அதிக விலை கொடுத்துள்ளனர். இந்த வெளிப்படையான ஊழலில் ஈடி, சிபிஐ, ஐடி விசாரிக்காமல் அமைதியாக இருக்க எத்தனை டெம்போக்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை பிரதமர் சொல்வாரா? ஜூன் 4 க்குப் பிறகு, இந்த மெகா ஊழலை இந்தியா கூட்டணி அரசு விசாரிக்கும். பொதுமக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு கேட்கப்படும். இவ்வாறு ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: அடுத்த மாதம் இந்தியா கூட்டணி அரசு பதவியேற்கும் போது மோதானி மெகா ஊழல், நிலக்கரி மற்றும் மின்சாதனங்களை சட்டவிரோதமாக அதிக விலைக்கு வாங்கியது, ரூ.20,000 கோடி சட்டவிரோத வருமானத்தை அதானி நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பியது போன்றவற்றை விசாரிக்க ஒரு மாதத்திற்குள் நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்படும். மோடி ஆட்சி மூலம் இந்திய தொழில்நிறுவனங்களை அதானிக்கு விற்பனை செய்ய நிர்ப்பந்தித்தது, அதானி நிறுவனத்தால் அதிகவிலைக்கு மின்சாரம் விற்பனை செய்தது, விமான நிலையங்களில் அதிக கட்டணம் செலுத்தியது உள்ளிட்ட அனைத்தும் விசாரிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழ்நாடு மின்வாரியத்திற்கு நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு அதானி ஊழல் குறித்து விசாரணை: ராகுல்காந்தி அதிரடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: