சென்னை: தமிழக சைபர் குற்றப்பிரிவு பெயரில் சைபர் நிபுணர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்புகள் வழங்குவதாக போலி விளம்பரத்தை யாரும் நம்ப வேண்டாம் என்று தமிழக காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக காவல்துறை இயக்குநர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் இணையவழி குற்றப்பிரிவு, சமூக ஊடக தளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளியான சைபர் நிபுணர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்புகளை வழங்குவதாக கூறும் விளம்பரங்கள் தொடர்பாக அதிகாரப்பூர்வமான விளக்கத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வரும் விளம்பரங்கள் தவறானவை என கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவு தற்போது சைபர் பாதுகாப்பு, டிஜிட்டல் குற்றவியல் ஆய்வு, நெட்வொர்க் குற்றவியல் ஆய்வு, சைபர் சட்டம் போன்றவற்றில் சிறப்பு பெற்ற நிபுணர்களின் பட்டியலை உருவாக்கும் பணியில் உள்ளது.
இந்த பட்டியல் மூலம் தேவையான பொழுது சைபர் குற்றவியல் விசாரணைகளுக்கு உதவ நிபுணர்களை அணுக முடியும். இது நிரந்தர வேலை வாய்ப்பு அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறது. பொதுமக்கள் மற்றும் வேலைவாயப்பு தேடுபவர்கள் எந்தவொரு வேலைவாய்ப்பு தகவலையும் அதிகாரப்பூர்வ வழிகளில் சரிபார்க்கும் பொறுப்புடன் இருக்குமாறு இணையவழி குற்றப்பிரிவு கேட்டுக்கொள்கிறது. ஏனெனில் மோசடியான வேலைவாய்ப்பு விளம்பரங்களால் ஆபத்துகள் உள்ளன. சட்ட அமலாக்க நிறுவனங்களின் விளம்பரத்தை தவறாக பயன்படுத்தி வேலைவாய்ப்பு தேடுபவர்கள் ஏமாற்றுதல் போலி விளம்பரங்கள் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழக சைபர் குற்றப்பிரிவு பெயரில் நிரந்தர வேலைவாய்ப்புகள் வழங்குவதாக சமூக வலை தளங்களில் போலி விளம்பரம் appeared first on Dinakaran.